search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி உருவபொம்மை எரிப்பு: தினகரன் ஆதரவாளர்கள் 193 பேர் சிறையில் அடைப்பு
    X

    எடப்பாடி பழனிசாமி உருவபொம்மை எரிப்பு: தினகரன் ஆதரவாளர்கள் 193 பேர் சிறையில் அடைப்பு

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட தினகரன் ஆதரவாளர்கள் 193 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை நீக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை கண்டித்து டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கரூரில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மையை தீயிட்டு கொளுத்தி அவருக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர்.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து தாரணி சரவணன், கோல்டு ஸ்பாட் ராஜா, தானேஷ், சந்துரு உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கரூர் முதலாவது ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அனைவரும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டனர். இதையடுத்து 27 பேரையும் போலீசார் திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    அவர்கள் மீது 143, 188, 341, 285 உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உள்ளிட்ட 7 பேர் எடப்பாடி உருவ பொம்மையை எரித்ததாக கைது செய்யப்பட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாள் காவலில் வைக்குமாறு நீதிபதி பரமசிவம் உத்தரவிட்டார். அதன்பேரில் இன்பத்தமிழன் உள்பட 7 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதேபோல் காரியாபட்டியில் கைதான முன்னாள் எம்.எல்.ஏ. சிவசாமி உள்பட 10 பேரும் சிறையில் அடைக்கப்பட்டன.

    கடலூரில் அண்ணாபாலம் அருகில் உள்ள தினகரனின் ஆதரவாளர் ராமலிங்கம் தலைமையில் போராட்டம் நடத்திய 8 பேரை கைது செய்தனர். இவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தஞ்சை ரெயில் நிலையத்தில் தினகரன் அணி தெற்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் எடப்பாடி பழனிசாமி உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

    இது தொடர்பாக 61 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். திருவையாறில் 30 பேரும், ஒரத்த நாட்டில் 20 பேரும், பட்டுக்கோட்டையில் 26 பேரும் என மாவட்டம் முழுவதும் 137 பேர் கைது செய்யப்பட்டனர்.

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியனின் மகனும், அ.தி.மு.க. அம்மா அணியின் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில துணை செயலாளருமான வி.கே.பி. சங்கர் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர். இவர்கள் பாளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
    Next Story
    ×