search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5-வது நாளாக நீடிப்பு: அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
    X

    5-வது நாளாக நீடிப்பு: அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று 5-வது நாளாக அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோவின் ஒரு பிரிவினர் கடந்த 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7-வது ஊதியக் குழுபரிந்துரைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் - மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

    நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை அரசு எடுக்க தொடங்கி விட்டது.

    யாருக்கும் விடுப்பு அளிக்க கூடாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுப்பதற்கான விளக்க நோட்டீஸ் (17பி) அனுப்பவும் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    போராட்ட நடவடிக்கை ஒருபுறம் எடுக்கப்பட்டாலும் கூட அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இன்று 5-வது நாளாக அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் நடக்கிறது.

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ - ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் தாஸ் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

    கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில் 300-க் கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணி, மாயவன் ஆகியோர் தலைமையில் இன்று போராட்டம் நடந்தது. இதில் 100-க்கும் மேலான பெண் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

    கோரிக்கைகள் நிறை வேறும் வரை போராட்டம் தொடரும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அதனால் வளாகத்தில் சமையல் செய்து சாப்பிட்டனர். பெரிய அண்டாவில் உணவு தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மதியம் உணவருந்திய பிறகும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அரசு ஊழியர்களுடன் கல்லூரி ஆசிரியர்களும் சேர்ந்து போராடி வருகிறார்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளைச் சேர்ந்த அவர்கள் பணிக்கு செல்லாமல் இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×