search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நவோதயா பள்ளிகள் தொடங்க ஐகோர்ட்டு உத்தரவு: பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்பு
    X

    நவோதயா பள்ளிகள் தொடங்க ஐகோர்ட்டு உத்தரவு: பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்பு

    தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கலாம் என்ற ஐகோர்ட்டின் உத்தரவுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    ஏழை மாணவர்களுககு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு 1986-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி என்ற இடத்தில் நவோதயா வித்யாலயா திட்டத்தை தொடங்கியது.

    படிப்பில் திறமை வாய்ந்த பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக தரமான கல்வியை விடுதிகளில் தங்கி படிக்க மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் தமிழ்நாட்டை தவிர எல்லா மாநிலங்களிலும் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற அளவில் மத்திய அரசு நிதியுதவியுடன் நடைபெற்று வருகிறது.

    இப்பள்ளிகளில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வியுடன் உணவு, உறைவிடம், சீருடை, காலணிகள், மருத்துவம், எழுது பொருள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    கடந்த வருடம் புதிதாக 62 நவோதயா பள்ளிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அப்போது நான் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடமும், அடுத்த முதல்வர் பன்னீர்செல்வம், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை சந்தித்து தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க அனுமதி வழங்க கேட்டேன்.

    ஆனால் இன்று வரை தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் ஐகோர்ட்டு மதுரை கிளை தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் தொடங்கலாம் என உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறேன்.

    இதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு மத்திய அரசின் தரமான கல்வி கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×