search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு
    X

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணை யின் நீர்மட்டம் 75 அடியை தாண்டி உள்ளது.
    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் தமிழகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாதுகாப்பு கருதி கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    மேலும் தமிழக - கர்நாடக எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அவ்வப்போது நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.

    நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் 13 ஆயிரத்து 700 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இது நேற்று காலை திடீரென்று 9 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

    இந்த நிலையில் நேற்று பிற்பகல் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் படிப்படியாக நீர் வரத்து அதிகரித்தது. நேற்று இரவு 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்றும் இதே நிலை நீடிப்பதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க இன்று 11-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருவதால் 24 மணி நேரமும் காவிரி கரையோர பகுதியில் போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் ரோந்து சுற்றி வருகின்றனர்.

    நேற்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக் கல்லில் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்ட்டம் உயர்ந்து கொண்டு வருகிறது. தற்போது நீர்வரத்து அதிக அளவு உள்ளதால் நீர்மட்டம் வேகமாக உயருகிறது.

    நேற்று காலை 11 ஆயிரத்து 800 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 20 ஆயிரத்து 170 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 73.44 அடியில் இருந்து 75.26 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 2 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 700 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் திறப்பை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் மேலும் உயருவதற்கான வாய்ப்பு உள்ளது.
    Next Story
    ×