search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடையை மீறி போராட்டம்: அரசு ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயுமா?
    X

    தடையை மீறி போராட்டம்: அரசு ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயுமா?

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் இன்று தீவிரம் அடைந்துள்ளதால் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போராட்டகாரர்கள் மீது எஸ்மா சட்டம் பாயலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
    சென்னை:

    7-வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை ஈரோட்டில் அழைத்து பேசிய போது உடன்பாடு ஏற்படவில்லை. ஜாக்டோ-ஜியோ அமைப்பினரிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் சங்கம் 2 ஆக உடைந்தது.

    இதில் 60 சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அறிவித்து அக்டோபர் 15-ந் தேதிக்கு போராட்டத்தை ஒத்தி வைத்தனர்.

    ஆனால் 17 சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களது போராட்டத்துக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. அனாலும் தடையை மீறி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இதையொட்டி ஆயிரம் ஊழியர்களுக்கு அரசு நோட்டீசு அனுப்பி உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று அதில் கேட்கப்பட்டுள்ளது.

    ஆனாலும் நோட்டீசை பொருட்படுத்தாமல் இன்றும் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உருவாகும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    எனவே அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர 2003-ல் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது பயன்படுத்தப்பட்ட எஸ்மா, டெஸ்மா என்ற அத்தியாவசிய சட்டங்களின் படி நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடந்து வருகிறது.

    இதுநாள் வரை போராட்டத்தில் ஈடுபடுபவர்களை காலையில் கைது செய்து மாலையில் விடுதலை செய்து வந்தனர்.

    ஆனால் இப்போது போராட்டம் நடத்தக்கூடாது என்று கோர்ட்டு அறிவித்துள்ளதால் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைக்கலாமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், “நீதிமன்ற உத்தரவை செயல் படுத்துவது எங்கள் கடமை. எனவே சட்டம்-ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அனுமதியின்றி யார் போராடினாலும் அவர்களை கைது செய்து சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வோம்” என்றனர்.

    அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் போராட்டம் இன்று தீவிரம் அடைந்துள்ளதால் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எஸ்மா சட்டம் இவர்கள் மீது பாயும் என தெரிகிறது.
    Next Story
    ×