search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாங்குநேரி அருகே வியாபாரி கொலை: நண்பர் கைது
    X

    நாங்குநேரி அருகே வியாபாரி கொலை: நண்பர் கைது

    நாங்குநேரி அருகே வியாபாரி கொலையில் அவரது நண்பர் கைது செய்யப்பட்டார். கொலை செய்யப்பட் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வடக்கு விஜயநாராயணத்தில் இருந்து இட்டமொழி செல்லும் சாலையில், ஏழாங்கால் பஸ்நிறுத்தம் அருகே ஒரு வாழைத் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தை பராமரித்து வரும் வடக்கு விஜயநாராயணத்தை சேர்ந்த ராஜகோபால்(வயது 70), நேற்று காலை மோட்டார் போடுவதற்காக தோட்டத்துக்கு வந்தார்.

    அப்போது மோட்டார் அறையின் முன்பு சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் லுங்கி, சட்டை, காலில் செருப்பு அணிந்தபடி தலையில் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே மதுபாட்டில், பிஸ்கட், தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர்கள் சிதறிக் கிடந்தன.

    இதுகுறித்து ராஜகோபால் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின் பேரில், நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) கனகராஜ், இன்ஸ்பெக்டர்கள் வெர்ஜின் சேவியோ, சுரேஷ் பெலிக்ஸ் பீட்டர், சபாபதி மற்றும் சப்இன்ஸ்பெக்டர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

    மேலும் போலீஸ் மோப்ப நாய் ‘டைகரும்‘ வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து ஓடி, வடக்கு விஜயநாராயணம் ஊர் எல்லை வரை சென்றுவிட்டு, மீண்டும் தோட்டத்துக்கே திரும்பி வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடக்கு விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை நாடார் தெருவை சேர்ந்த மாரியப்பன் (வயது 56) என்பது தெரிய வந்தது. அவருடைய மனைவி சின்னம்மாள்(50). குழந்தைகள் இல்லை. மாரியப்பன் ஊர், ஊராக மொபட்டில் சென்று பாத்திர வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த கொலை தொடர்பாக மற்றொரு பாத்திர வியாபாரியான பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. பி காலனியை சேர்ந்த முருகன்(40) என்ற குட்டி பண்டாரத்தை போலீசார் தேடி வந்தனர். இன்று அதிகாலை முருகனை போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மாரியப்பனுக்கும் முருகனுக்கும் தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இதனால் மாரியப்பனை தீர்த்துகட்ட முடிவு செய்த முருகன் நேற்று முன்தினம் இரவு அவரிடம் ஆசை வார்த்தை கூறி மது குடிக்க அழைத்துள்ளார். அதற்கு சம்மதித்த மாரியப்பனை விஜயநாராயணம் அழைத்து வந்த முருகன் அங்கு மதுவிருந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது.

    இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×