search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே கனமழை காரணமாக தரைப்பாலம் உடைந்தது
    X

    குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே கனமழை காரணமாக தரைப்பாலம் உடைந்தது

    குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழை காரணமாக மரப்பாலம் என்ற இடத்தில் தரைப்பாலம் உடைந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது.

    தொடர்மழை காரணமாக எமரால்டு, அவலாஞ்சி, அப்பர்பவானி, காமராஜ் சாகர், பைக்காரா, குந்தா ஆகிய அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதே போல் ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கொடநாடு, தேவாலா, கூடலூர், பந்தலூர், நடுவட்டம் ஆகிய பகுதிகளில் இடி- மின்னலுடன் கனமழை பெய்தது.

    குன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை 3 மணி முதல் விடிய விடிய கனமழை பெய்தது. காலையிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்தது.

    இதனால் ரோடுகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே மரப்பாலம் என்ற இடத்தில் தரைப்பாலம் உடைந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    இதனால் மேட்டுப்பாளையம், கல்லாறு, வழியாக குன்னூர், ஊட்டிக்கு செல்லும் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து குன்னூரில் இருந்து கோத்தகிரி வழியாக மாற்றுப் பாதையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

    குன்னூர் அருகே கோடேரி, மவுண்ட் கிள சண்ட் ஆகிய இடங்களில் மழையால் மரங்கள் முறிந்து ரோட்டில் விழுந்தது. இதையடுத்து தீயணைப்பு நிலைய வீரர்கள், வருவாய் துறையினர் விரைந்து சென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    குன்னூரில் பெய்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு முதல் காலை வரை மின்சாரம் இல்லாததால் மக்கள் சிரமப்பட்டனர். மேலும் கடுங்குளிரும் வாட்டி வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மலை காய்கறிகளான கேரட், முட்டை கோஸ், உருளை ஆகியவை தண்ணீரில் மூழ்கி அழுகும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×