search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவல்லிக்கேணியில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை: 50 பவுன் நகை கொள்ளை
    X

    திருவல்லிக்கேணியில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை: 50 பவுன் நகை கொள்ளை

    சென்னை திருவல்லிக்கேணியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து 50 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பழனியப்பன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் கலா (52). இவரது கணவர் துரை. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    கலாவிற்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கமல் (35). திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். 2-வது மகன் ஜெயக்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கலா வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று அவரது வீட்டின் கதவு திறக்கப்படாமல் பூட்டப்பட்டு இருந்தது. மகன் கமல் அவரது செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போன் ‘சுவிட்ச்’ ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டிற்கு நேரில் வந்தார்.

    அப்போது வீட்டின் கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டு இருந்ததை பார்த்து கமல் அதிர்ச்சி அடைந்தார். சந்தேகம் அடைந்த அவர் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தாய் கலா சமையல் அறையில் பிணமாக கிடந்தார்.

    அவரது தலையில் ரத்த காயம் ஏற்பட்டு ரத்தம் ஆறாக ஓடியிருந்தது.

    கலா வீட்டில் தனியாக இருப்பதை பார்த்து பட்டப்பகலில் கொள்ளை கும்பல் வீட்டிற்குள் நுழைந்துள்ளது. அவரை அடித்து கொலை செய்து விட்டு கழுத்தில் கிடந்த நகைகளை கும்பல் பறித்து சென்றுள்ளது. செயின், வளையல், மூக்குத்தி உள்ளிட்ட நகைகள் அவரது உடலில் இருந்து காணாமல் போய் இருந்தது.

    மேலும் பீரோவில் இருந்த லாக்கரையும் உடைத்து கொள்ளையர்கள் நகை- பணத்தை கொள்ளை அடித்து சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. கலா வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை போய் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதுகுறித்து அண்ணா சதுக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கொலை நடந்த இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை பதிவு செய்தனர். பணம் கொடுக்கல்-வாங்கல் முன் விரோதத்தில் கலா கொலை செய்யப்பட்டாரா, நகை-பணத்துக்காக இந்த கொலை நடந்ததா? என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடக்கிறது.

    கலாவின் உறவினர்கள், மகன்கள் தொழில் ரீதியாக தொடர்புடையவர்கள் யார் யார் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

    மேலும் செல்போனில் பதிவாகி உள்ள எண்களையும் சோதனை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×