search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கோபிநாத்
    X
    வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கோபிநாத்

    கோவை அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் பிணமாக மீட்பு

    கோவை அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் உடலை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் மீட்டனர்.
    கோவை:

    கோவையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளங்கள், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தினமும் மாலை நேரத்தில் பெய்து வரும் மழை விடிய, விடிய கொட்டி வருகிறது.

    இதேபோல் நேற்றும் மாலை பெய்ய தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை நீடித்தது. இதன் காரணமாக பல இடங்களில் மழைவெள்ளம் ஆறாக ஓடியது. நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ரேஸ்கோர்ஸ், ஆர்.எஸ்.புரம், பாரதி பார்க் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கிளைகள் விழுந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநகராட்சி, மின்வாரிய ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மரக்கிளைகளை அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர்.

    மழையின் காரணமாக கோவை சுண்டகாமுத்தூர் பகுதியில் உள்ள ஆறுமுககவுண்டனூர் தரைபாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்போது அந்த பாலத்தை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் நின்றனர். அவர்கள் தரைபாலத்தில் ஓடிய வெள்ளத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

    அப்போது ஒரு வாலிபர் மொபட்டில் வந்தார். அவர் தரைபாலத்தை கடந்தார். அப்போது வாகனத்துடன் அவர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்தவர்கள் பேரூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தேடுதல்வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது தரைபாலத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அவர் சென்ற மொபட்டை மீட்டனர். வெள்ளம் அதிகளவில் ஓடியதாலும், விட்டுவிட்டு மழை பெய்ததாலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை மீட்க முடியவில்லை.

    இதையடுத்து இன்று 2-வது நாளாகவும் அவரை தேடும் பணி நடந்தது. அப்போது தரைபாலத்தில் இருந்து சிறிது தூரத்தில் இருந்த ஒரு புதருக்குள் அவரது உடல் ஒதுங்கி கிடந்தது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் உடலை மீட்டனர். விசாரணையில் அவர் சுண்டகாமுத்தூரை சேர்ந்த கோபிநாத்(வயது 35) என்பதும், கோவையில் உள்ள ஒரு தனியார் கேஸ் ஏஜென்சியில் சிலிண்டர் சப்ளை செய்யும் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. நேற்று வேலை முடிந்து வீடு திரும்பிய அவர் வெள்ளத்தில் சிக்கி பலியானது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வெள்ளத்தில் சிக்கி பலியான கோபிநாத்துக்கு காளீஸ்வரி(29) என்ற மனைவியும், பூங்கொடி(13) என்ற மகளும், கவுதம்(10) என்ற மகனும் உள்ளனர்.



    Next Story
    ×