search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெரினாவில் 2-வது நாளாக இன்றும் போலீஸ் தடை: காதல் ஜோடிகள் விரட்டியடிப்பு
    X

    மெரினாவில் 2-வது நாளாக இன்றும் போலீஸ் தடை: காதல் ஜோடிகள் விரட்டியடிப்பு

    மாணவர்கள் போராட்டம் நடத்தலாம் என்பதால் மெரினாவில் 2-வது நாளாக இன்றும் போலீஸ் தடை விதித்துள்ளது, தீவிரமாக கண்காணித்து வருகிறது.

    சென்னை:

    நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் இன்று 6-வது நாளாக போராட்டம் நடக்கிறது.

    சென்னையிலும் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்படி நீட் தேர்வுக்கு எதிராக திரளும் மாணவர்கள், மெரினாவில் கூடி போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலை தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

    நேற்று இந்த பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியது. இதனால் மெரினா கடற்கரையில் சர்வீஸ் சாலையில் போக்கு வரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

    தடுப்பு வேலிகளை அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொது மக்கள் யாரும் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. இப்படி பாதுகாப்பு வளையத்துக்குள் மெரினா கடற்கரை கொண்டு வரப்பட்டிருந்த நிலையிலும் தனித்தனியாக ஜெயலலிதா நினைவிடத்தில் சில மாணவர்கள் புகுந்து விட்டனர். திடீரென ஜெயலலிதா சமாதியில் திரண்டு கோ‌ஷம் எழுப்பிய மாணவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    சென்னையில் இன்றும் மாணவர்கள் போராட்டம் நடந்தது. இதனால் நேற்று கூடியது போல மாணவர்கள் திரண்டு விடக் கூடாது என்பதில் போலீசார் உஷாராக இருந்தனர். மெரினா கடற்கரையில் பொது மக்கள் நுழைவதற்கு தடைவிதித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடற்கரை சாலையில் வாகனங்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    மெரினா காமராஜர் சாலையை தாண்டி யாரும் கடற்கரை பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படாததால் அங்கு ஆள் நடமாட்டமின்றி இருந்தது. கடற்கரை பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

    மெரினா கடற்கரையில் காலையிலேயே காதலர்கள் திரண்டு ஆங்காங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். அதுபோன்று இன்று கூடிய காதல் ஜோடிகள் பலர் கடற்கரை மணலில் அமர்ந்திருந்தனர். அவர்களை போலீசார் அங்கிருந்து விரட்டிவிட்டனர்.

    நேப்பியர் பாலத்தில் தொடங்கி கலங்கரை விளக்கம் வரையில் நூற்றுக் கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அதே நேரத்தில், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத் துக்கு செல்ல எந்த தடையும் விதிக்கப்படவில்லை. பொது மக்கள் அங்கு எப்போதும் போல அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் நேற்று திரண்டது போல அங்கு மாணவர் கள் கூடி விடக்கூடாது என்ப தால் தீவிர கண்காணிப் பில் ஈடுபட்டுள்ளனர்.

    ஜல்லிக்கட்டு போராட் டத்துக்கு பிறகே மெரினாவில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மாணவர்கள் கூட இருப்ப தாக தகவல் பரவுவது வாடிக்கையான ஒன்றாகவே இருந்து வருகிறது.

    விவசாயிகள், மீத்தேன் விவகாரம் உள்ளிட்ட பிரச் சினைகளுக்காக மாணவர் கள் போராட்டம் நடத்தப் போவதாக தொடர்ந்து தகவல் பரவி வருவதால் மெரினா கடற்கரை போராட்ட களம் போலவே மாறிவிட்டது.

    இப்படி தகவல் பரவி வந்தாலும் ஜல்லிக்கட்டுக்கு பிறகு மாணவர்கள் யாரும் அங்கும் திரளவில்லை. ஆனால் மாணவி அனிதா வின் மரணம் மாணவர்களை மீண்டும் மெரினாவுக்கு இழுத்து வந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக மெரினா வில் இயல்புநிலை மாறியுள் ளது. நீட்டுக்கு எதிராக களம் இறங்கியுள்ள மாண வர்கள் எப்போது வேண்டு மானாலும் மெரினாவில் கூடி போராட்டத்தில் ஈடுபட லாம் என்கிற பரபரப்பு அங்கு நிலவி வருகிறது. இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.

    Next Story
    ×