search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இதுவரை 31 பேர் பலி: கோவை மாவட்டத்தில் மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல்
    X

    இதுவரை 31 பேர் பலி: கோவை மாவட்டத்தில் மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல்

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 3 மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 31 பேர் பலியாகி உள்ளனர். அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 21 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கோவை:

    கடந்த ஜூன் மாதம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் கேரளாவில் டெங்கு காய்ச்சலால் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

    இதையொட்டி கேரள எல்லை யையொட்டி உள்ள கோவை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியது. குறிப்பாக பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு பாதிப்பு காணப்பட்டது.

    இதையடுத்து மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன் எச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக கிராமப்புறங்களில் குடியிருப்புகளில் தண்ணீர் தேங்காதவாறும், கொசுக்கள் உற்பத்தியை தடுக்க மருந்தும் தெளிக்கப்பட்டது. மேலும் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயமும் வழங்கப்பட்டது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 3 மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 31 பேர் பலியாகி உள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றனர்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தி மீண்டும் அதிகரித்துள்ளது. இதையடுத்து பொது மக்களுக்கு டெங்கு, வைரஸ் காய்ச்சல் மீண்டும் பரவி வருகிறது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 21 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போல் வைரஸ் காய்ச்சலுக்கு 122 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல் தனியார் ஆஸ்பத்திரிகளில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு சுமார் 450 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அரசு ஆஸ்பத்திரியில் தனியாக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் கடந்த 3 மாதத்தில் வெளி நோயாளிகளாக 6739 பேர் சிகிச்சை பெற்று சென்றனர்.

    அதன்படி ஜூன் மாதம் 1210 பேரும், ஜூலை மாதம் 1317 பேரும், ஆகஸ்டு மாதம் 4212 பேரும் சிகிச்சை பெற்று சென்றனர். இதேபோன்று உள்நோயாளிகளாக ஜூன் மாதம் 352 பேரும், ஜூலை மாதம் 818 பேரும், ஆகஸ்டு மாதம் 857 பேரும் சிகிச்சை பெற்று சென்றனர். இதில் டெங்கு காய்ச்சலால் மட்டும் 158 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவி வருகிறது. திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தற்போது 75 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தற்போது கோவை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே தேங்கி கிடக்கும் தண்ணீரால் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது.

    இதனால் டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவாமல் தடுப்பது முக்கியம். பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்து கொள்ளவேண்டும்.

    மேலும் சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருந்தால் உடனே ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்களிடம் காண்பித்து சிகிச்சை பெற வேண்டும். டாக்டர்களின் அனுமதி சீட்டு இல்லாமல் மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி சாப்பிடக்கூடாது.

    கோவை மாவட்டத்தை பொறுத்தவரை டெங்கு, வைரஸ் உள்ளிட்ட பாதிப்புகளை தடுக்கும் வகையில் முன்எச்சரிக்கை தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×