search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீல திமிங்கல விளையாட்டில் ஈடுபட்ட காரைக்கால் வாலிபர் மீட்பு
    X

    நீல திமிங்கல விளையாட்டில் ஈடுபட்ட காரைக்கால் வாலிபர் மீட்பு

    காரைக்காலில் நீல திமிங்கல விளையாட்டில் ஈடுபட்டு கத்தியால் கையை கீறி படம் வரைய முயன்ற வாலிபரை போலீசார் மீட்டனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டம் நிரவி பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது 22). இவர் சென்னையிலுள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். இவர் செல்போனில் புளூவேல் என்னும் நீல திமிங்கலம் விளையாட்டில் ஈடுபட்டு வந்தார்.

    கடந்த 20 தினங்களில் இரு முறை ‘நெட் காலிங்’ மூலம் வெளிநாட்டில் இருந்து மர்ம நபர் அலெக்சாண்டருடன் தொடர்பு கொண்டு பேசினார். அதனை தொடர்ந்து மின்னஞ்சல் மூலம் வந்த திகில் படங்களை அலெக்சாண்டர் பார்த்தார்.

    கடந்த 3-ந் தேதி நள்ளிரவில் அருகில் உள்ள சுடுகாட்டிற்கு சென்று செல்பி படம் எடுத்து அனுப்ப வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அன்றைய தினம் நள்ளிரவில் வீட்டில் இருந்து அலெக்சாண்டர் சுடுகாட்டுக்கு புறப்பட்டுச் சென்று செல்பி எடுத்து கொண்டார்.

    அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதை அலெக்சாண்டரின் தம்பி உணர்ந்தார். தனது அண்ணனின் நடவடிக்கைகள் அதிர்ச்சியூட்டும் வகையில் இருப்பதாக நிரவி போலீசில் தெரிவித்தார். உடனே போலீசார் அலெக்சாண்டரின் வீட்டிற்கு சென்று அவரிடம் விசாரித்தனர்.

    அப்போது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நீல திமிங்கல விளையாட்டில் அவர் ஈடுபட்டுள்ளதும், அந்த விளையாட்டில் 4 சவால்களை நிறைவேற்றி 5-வது கட்டமாக கையில் கத்தியால் கீறி நீல திமிங்கலத்தின் படத்தை வரைய முற்பட்டதும் தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து அலெக்சாண்டருக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். நீல திமிங்கல விளையாட்டில் இருந்து அவரை மீட்டனர்.

    இதுகுறித்து தெற்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு வம்சீதர ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீல திமிங்கல விளையாட்டில் ஈடுபட்டு இருந்த நிரவி பகுதியைச் சேர்ந்த அலெக்டசாண்டர் மீட்கப்பட்டுள்ளார். மேலும் யாராவது இந்த அபாயகரமான விளையாட்டில் ஈடுபட்டுள்ளனரா? என தனிப்படை மூலம் கண்காணித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நீல திமிங்கல விளையாட்டில் ஈடுபட்ட அலெக்சாண்டர் கூறும்போது, நீல திமிங்கல விளையாட்டில் ஈடுபட்டேன். போலீசாரின் உதவியுடன் தற்போது வெளியேறிவிட்டேன். இதுபோல் யாரும் இனி இந்த விளையாட்டில் ஈடுபட வேண்டாம்’ என்றார்.

    புதுவையில் நீலதிமிங்கல விளையாட்டில் ஈடுபட்ட வங்கி ஊழியர் பிரியாவை போலீசார் மீட்டனர். தற்போது காரைக்காலில் அலெக்சாண்டர் மீட்கப்பட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து புதுவை மற்றும் காரைக்காலில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நீல திமிங்கல விளையாட்டில் ஈடுபட்டுள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    Next Story
    ×