search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட் தலையீடு காரணமாகவே நீட் தேர்வினை கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது: கடம்பூர் ராஜூ
    X

    சுப்ரீம் கோர்ட் தலையீடு காரணமாகவே நீட் தேர்வினை கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது: கடம்பூர் ராஜூ

    சுப்ரீம் கோர்ட் தலையீடு காரணமாகவே நீட் தேர்வினை கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வரும் காலங்களில் மாணவ, மாணவியர் மருத்துவ படிப்பு படிப்பதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று கடம்பூர் ராஜூ பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர்ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஜெ. மறைவுக்கு பிறகு அவரது வழியில் ஆட்சி நடந்து வருகிறது.

    ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள்தான், கட்சியில் பொறுப்பு வகித்து வருகிறார்கள். ஜெ. பேரவை செயலாளராக நான் நீடித்து வருகிறேன். எங்களை கட்சியில் இருந்து நீக்குவதற்கோ புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்கோ யாருக்கும் அதிகாரம் இல்லை. ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் தினகரன். அவரையே கட்சியில் மீண்டும் சேர்க்கவில்லை. அவரால் யாரையும் கட்சியில் சேர்க்கவும் முடியாது. நீக்கவும் முடியாது. வரும் 12-ந்தேதி நடக்கும் பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை பார்க்கலாம்.

    அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வின் அனைத்து குழப்பங்களுக்கும் முடிவு வரும். பொதுக்குழுவை கூட்டுவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பன்னீர் செல்வத்திற்கும் மட்டுமே அதிகாரம் உள்ளது.

    வரும் 7-ந்தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தூத்துக்குடிக்கு வருகின்றனர்.

    சாயர்புரம் போப் கல்லூரியில் நடக்கும் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கின்றனர். இதே விழாவில் தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களை துவக்கி வைத்து புதிய திட்டங்களுக்கான அடிக்கல்லையும் நட்டுகின்றனர்.அன்று இரவு தூத்துக்குடிக்கு வரும் முதல்வர் மற்றும் துணை முதல்வர், அமைச்சர்கள், முன்னாள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார் இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.

    அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலையை ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு கடைசி வரை போராடியது. இதற்காக தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பிரதமரிடம் முறையிட்டுள்ளனர்.

    சுப்ரீம் கோர்ட் தலையீடு காரணமாகவே நீட் தேர்வினை கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வரும் காலங்களில் மாணவ, மாணவியர் மருத்துவ படிப்பு படிப்பதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×