search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமமூர்த்தியுடன், 2 பெண்களுக்கு திருமணம் நடைபெறும் என்று அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்
    X
    ராமமூர்த்தியுடன், 2 பெண்களுக்கு திருமணம் நடைபெறும் என்று அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்

    2 பெண்களை மணக்க இருந்த வாலிபர்: வாட்ஸ்அப்பில் பரவிய தகவலால் திருமணம் நிறுத்தம்

    ஒரு வாலிபர், 2 பெண்களை திருமணம் செய்ய இருந்த தகவல் வாட்ஸ்-அப்பில் பரவியது. இதைத்தொடர்ந்து ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ம.வெள்ளையாபுரத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது31). இவர் படிக்கவில்லை என்பதால் ஆடு மேய்த்து வருகிறார்.

    இவரது பெற்றோர் இறந்து விட்டதால் அக்காள் கலைச்செல்வி வீட்டிலேயே வளர்ந்து வந்தார். இவருக்கு கலைச்செல்வியின் மகள் பி.காம். பட்டதாரியான ரேணுகாதேவி (21) என்பவரையும், மற்றொரு சகோதரி அமுதவள்ளியின் மகள் காயத்ரி (20) என்பவரையும் வருகிற 4-ந்தேதி திருமணம் செய்து வைக்க நிச்சயிக்கப்பட்டது. இதில் காயத்ரி மாற்றுத்திறனாளி ஆவார்.

    இதையொட்டி திருமண பத்திரிகை அடிக்கப்பட்டு உறவினர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த வினோத திருமண பத்திரிகை வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பரவியது.

    இதுபற்றி வாட்ஸ்-அப்களில் “ராமமூர்த்தி நல்லா இருப்பா” என்று நகைச்சுவையான கருத்துக்கள் பதிவானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த தகவல் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்துக்கும் கிடைத்தது.

    ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து வைப்பதாக சமூக நல அதிகாரியிடம் உறுதிமொழி பத்திரம் அளித்தனர்.

    இந்த நிலையில் மணமகளின் தந்தை அழகர் சாமி மற்றும் அவரது உறவினர்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

    பின்னர் சமூகநலத்துறை அதிகாரி ராஜத்தை சந்தித்து உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்தனர். அதில் கூறி இருப்பதாவது:-

    எனது மகள் ரேணுகா தேவிக்கும், எனது தங்கையின் மகன் ராமமூர்த்திக்கும் 4-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. திருமண பத்திரிகையில் எனது தம்பி மகள் காயத்ரியின் பெயரை தவறுதலாக அச்சடித்து விட்டோம். அவர் உடல் வளர்ச்சி குன்றிய பெண்.

     ராமமூர்த்திக்கும், ரேணுகாதேவிக்கும் திருமணம் நடத்துவதாக புதிதாக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்

    எனவே வருகிற 4-ந்தேதி ரேணுகாதேவிக்கும், ராமமூர்த்திக்கும் மட்டுமே திருமணம் நடத்த உள்ளோம் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் புதிதாக அச்சடித்த திருமண அழைப்பிதழையும் அதிகாரிக்கு கொடுத்து விட்டு சென்றனர்.

    இதுகுறித்து அதிகாரி ராஜம் கூறுகையில், நாகதோ‌ஷம் நீங்க ஜோசியரின் அறிவுரைப்படி அழைப்பிதழ் அச்சடித்ததாகவும், தவறு செய்து விட்டதாகவும் தெரிவித்தனர். மேலும் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து அனுப்பினோம்.

    திருமணம் குறித்து போலீஸ் சூப்பிரண்டு உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். திருமண நாளன்று சமூக நலத்துறை ஊழியர்கள் கண்காணிப்பார்கள் என்றார்.
    Next Story
    ×