search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழிசை சவுந்தரராஜன் பற்றி விமர்சனம்: வழக்கை ரத்து செய்ய கோரி நாஞ்சில் சம்பத் மனு
    X

    தமிழிசை சவுந்தரராஜன் பற்றி விமர்சனம்: வழக்கை ரத்து செய்ய கோரி நாஞ்சில் சம்பத் மனு

    தமிழிசை சவுந்தரராஜன் பற்றி விமர்சனம் செய்ததாக பல்லாவரம் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யகோரி நாஞ்சில் சம்பத் வழக்கு தொடர்ந்துள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. அம்மா அணியின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை விமர்சனம் செய்ததாக அந்த கட்சியின் நிர்வாகி ஆனந்த் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பல்லாவரம் போலீசார் என் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    அரசியல் வாழ்க்கையில் உள்ள அனைத்து தலைவர்களுமே, விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அரசியல் என்றால், ஒருவரை ஒருவர் விமர்சிப்பது வழக்கம் தான். நான் தமிழிசை சவுந்தரராஜனை விமர்சனம் செய்ததற்கும், என் மீது போலீசார் பதிவு செய்துள்ள இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளுக்கும் சம்பந்தம் இல்லாமல் உள்ளது.

    பெண் வன்கொடுமைச் சட்டப்பிரிவுகளின் கீழ் என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் புகார் கொடுத்த ஆனந்த் பாதிக்கப்பட்டவர் அல்ல. அவர் கொடுத்த புகாரை போலீசார் ஏற்றுக்கொண்டிருக்கக்கூடாது. மேலும், அரசியலமைப்பு சட்டத்தில், பேச்சுரிமை வழங்கப்பட்டுள்ளது.

    போலீசார் பதிவு செய்துள்ள வழக்கு, என்னுடைய பேச்சுரிமையை பாதிக்கும் விதமாக உள்ளது. எனவே, பல்லாவரம் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் காசிநாத பாரதி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனு மீதான விசாரணையை நாளை (வெள்ளிக்கிழமைக்கு) தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
    Next Story
    ×