search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசியல் குழப்பத்திற்கு கவர்னரே காரணம்: சேடப்பட்டி முத்தையா குற்றச்சாட்டு
    X

    தமிழக அரசியல் குழப்பத்திற்கு கவர்னரே காரணம்: சேடப்பட்டி முத்தையா குற்றச்சாட்டு

    தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு கவர்னரே காரணம் என்று முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா கூறினார்.
    மதுரை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொள்வதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த வாரம் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்ராவை சந்தித்து மனு அளித்தனர்.

    இதைத் தொடர்ந்து புதுச்சேரியில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஜனாதிபதியை சந்தித்து புகார் அளிக்க திட்டமிட்டுள்ளனர். 19 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வாபஸ் காரணமாக அ.தி.மு.க. அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டதாகவும், சட்டசபையில் பலத்தை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. கவர்னரை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை வைத்தனர். ஆனால் எடப்பாடி அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவர வாய்ப்பு இல்லை என்று கவர்னர் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இது எதிர்க்கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கவர்னரின் செயல்பாடு குறித்து முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா கூறியதாவது:-

    எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், அவருக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்கிறோம் என்றும் 19 எம்.எல்.ஏ.க்கள், கவர்னரை சந்தித்து நேரில் மனு அளித்தனர்.

    ஆனால் இது உள்கட்சி விவகாரம். எடப்பாடி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட முடியாது என்று கவர்னர் தெரிவித்திருப்பது விதண்டாவாதமாக உள்ளது.



    தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் குழப்பங்களுக்கு கவர்னர் வித்யாசாகர்ராவ் தான் காரணம். பல்வேறு மாநிலங்களில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாநில கவர்னர்கள் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டுள்ளனர்.

    ஆனால் கவர்னர் வித்யாசாகர் ராவ் அரசியல் சட்ட விதிமுறைகளையும் தாண்டி மத்திய பா.ஜனதா அரசின் கண் அசைவுக்கு கட்டுப்பட்டு நடப்பது போல் இருக்கிறது.

    ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேச கட்சியின் ஆட்சி நடைபெற்ற போது முதல்வராக இருந்த என்.டி. ராமராவ் மீது அதே கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு நம்பிக்கை இல்லை என்று கூறி ஆதரவை வாபஸ் பெற்றார். உடனே கவர்னர் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முதல்வருக்கு உத்தரவிட்டார்.

    இதனால் பிரச்சினை ஏற்பட்டு என்.டி. ராமராவ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆனார்.

    இது போன்று பல்வேறு முன் உதாரணங்கள் மற்றும் அரசியல் சட்ட நெறிமுறைகள் உள்ளன. இவற்றை எல்லாம் கவர்னர் பொறுப்புடன் ஆய்வு செய்து தமிழக அரசியலில் நிலவி வரும் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×