search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பெண் குழந்தையை படத்தில் காணலாம்.
    X
    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பெண் குழந்தையை படத்தில் காணலாம்.

    திருப்பூரில் பிறந்த 1 மணி நேரத்தில் பெண் சிசுவை கொட்டும் மழையில் தூக்கி வீசிய கொடூரம்

    திருப்பூரில் பிறந்த 1 மணி நேரத்தில் பெண் சிசுவை கொட்டும் மழையில் தூக்கி வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் சின்னாண்டிபாளையம் எல் அண்டு டி டேங்க் பின்புறமுள்ள காட்டுப்பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு குழந்தையின் அழுகுரல் கேட்டது. அப்போது அங்கு மழை பெய்தது.

    அந்த வழியாக சென்ற ஒரு விவசாயி குழந்தையின் அழுகுரல் கேட்டு அதிர்ச்சியடைந்தார். கொட்டும் மழையில் கடுங்குளிரில் குழந்தையின் அழுகுரல் வந்த திசையை நோக்கி ஓடிப்பார்த்தார்.

    அப்போது பிறந்து 1 மணிநேரமே ஆன பெண் குழந்தை தொப்புள் கொடி அறுத்த நிலையில் கிடந்தது. இது குறித்து தகவல் தெரிந்ததும் பொதுமக்கள் அங்கு கூடினர்.

    மங்கலம் போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் அங்கு வந்தது.

    குழந்தைக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது.

    2½ கிலோ எடை உள்ள குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தது. இருந்தாலும் மழை மற்றும் குளிரால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் கள்ளக்காதலில் பிறந்த குழந்தை என்பதால் பெற்ற தாயே குழந்தையை வீசிச்சென்றாரா? பெண் குழந்தை என்பதால் வீசப்பட்டதா? அல்லது முன் பகை காரணமாக குழந்தை கடத்தி வீசப்பட்டதா? குழந்தையின் தாய் யார்? என்பது குறித்தும், திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தாய்-சேய் நல விடுதி, தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட இடங்களில் நேற்று பிரசவம் ஆன குழந்தைகள் குறித்தும், கர்ப்பிணியாக இருந்தவர்கள் யார்? யார்? என்பதும் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×