search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எனக்கு பதவி கொடுத்ததை கிண்டல் செய்வதா?: நடிகர் செந்தில் ஆவேசம்
    X

    எனக்கு பதவி கொடுத்ததை கிண்டல் செய்வதா?: நடிகர் செந்தில் ஆவேசம்

    நடிகர் செந்திலுக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பதவி கொடுத்தது நகைப்புக்குரியது என்று திருச்சி எம்.பி.குமார் கிண்டல் செய்து இருந்தார். இதற்கு செந்தில் பதில் அளித்துள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நடிகர் செந்திலுக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பதவி வழங்கி உள்ளார். இந்த பதவியை வகித்து வந்த முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

    இதுதவிர, அ.தி.மு.க. இளம் பெண்கள் பாசறை செயலாளர் பதவியில் இருந்து திருச்சி எம்.பி. குமார் நீக்கப்பட்டு உள்ளார். இது பற்றி கூறிய அவர், “நடிகர் செந்திலுக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பதவி கொடுத்தது நகைப்புக்குரியது” என்று கிண்டல் செய்து இருந்தார்.

    இதற்கு நடிகர் செந்தில் பதிலடி கொடுத்துள்ளார். தனக்கு பதவி கிடைத்தது ஏன் என்பதற்கும் விளக்கம் அளித்துள்ளார்.

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டது குறித்து நடிகர் செந்திலிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    இந்த பதவியை எனக்கு வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அம்மா சேவல் சின்னத்தில் போட்டியிட்ட காலத்திலேயே நான் அவருடைய கட்சியில்தான் இருந்தேன். தொடர்ந்து அம்மாவின் ஆதரவாளராகவே இருந்து வந்தேன்.

    கட்சிக்காக ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்தேன். எனக்கு மிகவும் தாமதமாக கட்சி பதவி கிடைத்திருக்கிறது. இதை திருச்சி குமார் எம்.பி. கிண்டல் செய்து இருக்கிறார். என்னை விமர்சனம் செய்ய அவருக்கு தகுதி இல்லை.

    அம்மாவை காக்கா பிடித்து எம்.பி. ‘சீட்’ வாங்கியவர் அவர். ஐசரி வேலன் அ.தி.மு.க.வில் சேர்ந்த போதே நானும் கட்சிக்கு வந்து விட்டேன். வரலாறு தெரியாமல் என்னை குமார் குறை கூறுகிறார். பட்டி தொட்டி எல்லாம் பிரசாரம் செய்த என்னைப் பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும். இந்த குமாரை யாருக்காவது தெரியுமா?

    அம்மா இருந்த வரை அவர் என்னை நம்பினார். அவரது ஆதரவு எனக்கு இருந்தது. கட்சிக்கு உறுதுணையாக இருங்கள் உங்களுக்கு நல்லது நடக்கும் என்று கூறினார். அவர் சொன்னபடிதான் நான் பிரசாரத்தில் ஈடுபட்டேன்.

    இந்த கட்சியில் இருந்த நடிகர்கள் எஸ்.எஸ். சந்திரன், ராதாரவி ஆகியோருக்கு அம்மா பதவி வழங்கினார். இந்த கட்சிக்காகவே பாடுபட்ட எனக்கு கட்சி பதவி தந்த தினகரனை குறை கூறுவதா? மல்லாக்காக படுத்துக்கொண்டு எச்சில் துப்புவது போல குமார் எம்.பி. நடந்து கொண்டிருக்கிறார்.

    தினகரன் தலைமையில் அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் குழப்பம் நீங்கும். கட்சி பிழைக்கும். இல்லையென்றால் சிதறி வீணாகி விடும். இதை கட்சியில் உள்ள அனைவரும் உணர வேண்டும்.

    இது எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி. ஒரு நடிகரின் கட்சி. இந்த கட்சிக்காக தொடர்ந்து உழைக்கும் என்னையும், ராமராஜனையும் அழைக்காமலேயே முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார்.

    எனக்கு பதவி கொடுத்ததை ஒரு எம்.பி. குறை கூறுகிறார். முன்பே கிடைக்க வேண்டிய கட்சி பதவி தாமதமாக கிடைத்தாலும், இதை வழங்கிய தினகரனுக்கும், சின்னம்மாவுக்கும் நன்றி. சின்னம்மாவுடனும் தினகரனுடன் ஒன்று சேர்ந்து அனைவரும் கட்சியை காப்பாற்ற வேண்டும். தினகரனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு செந்தில் கூறினார்.
    Next Story
    ×