search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நளினி ‘பரோல்’ கேட்டு அளித்த மனு பரிசீலனையில் உள்ளது: ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு
    X

    நளினி ‘பரோல்’ கேட்டு அளித்த மனு பரிசீலனையில் உள்ளது: ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு

    ‘ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி நளினி ‘பரோல்’ கேட்டு அளித்த மனு பரிசீலனையில் உள்ளது’ என்று சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். 26 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ள முருகன் ஆன்மிக ஈடுபாடு காரணமாக, ‘ஜீவ சமாதி’ என்னும் உண்ணாமல் உடலை வருத்தி உயிர் துறக்க முடிவு செய்து கடந்த 18-ந் தேதியில் இருந்து நேற்று வரை 9 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். மேலும் மவுன விரதமும் மேற்கொண்டு வந்தார். உடல் நிலை சோர்வு காரணமாக அவருக்கு தினமும் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு நேற்று முன்தினம் தமிழக அரசு பரோல் வழங்கியது.

    இந்த நிலையில் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் ஜெயில் வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    முருகன் உண்ணாவிரதம் இருப்பது தொடர்பாக அவரிடம் பேசினோம். அவரும் என்னிடம் பேசினார். அப்போது நாங்கள் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர் உண்ணாவிரதத்தை கைவிடவில்லை. அவரது பதிலுக்காக காத்திருக்கிறோம்.

    ஜெயில் விதிமுறைகளை மீறியதால் அதற்கான நடவடிக்கைகளும், அவர் மீது மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அவரது உடல்நிலை பாதிக்காத வகையில் எல்லா நடவடிக்கைகளும் ஜெயில் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் மத்திய ஜெயிலில் உள்ள நளினி 30 நாட்கள் பரோல் கேட்டு 2 நாட்களுக்கு முன்பு அளித்த மனு பரிசீலனையில் உள்ளது. மேலும் அவர் தன்னை புழல் ஜெயிலுக்கு மாற்றக்கோரி அளித்த மனுவும் பரிசீலனையில் உள்ளது.

    தமிழக ஜெயிலில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுக்க புதிய நவீன தொழில்நுட்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக சென்னை புழல் ஜெயிலில் ‘ஜாமர்’ கருவி (செல்போன் அலைவரிசையை தடுக்கும் கருவி) 2 வைக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மத்திய ஜெயில்களிலும் 3 மாதத்திற்குள் ‘ஜாமர்’ கருவிகள் பொருத்தப்பட உள்ளன. இதுதொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் 9-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன் மவுன விரதமும் மேற்கொண்டு வந்தார். நேற்று சிறைத்துறை தலைவர் சைலேந்திரபாபுவிடம் அவர் பேசியதை தொடர்ந்து அவரது மவுன விரதம் கலைந்தது.

    Next Story
    ×