search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரறிவாளன் வீட்டு முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதை படத்தில் காணலாம்.
    X
    பேரறிவாளன் வீட்டு முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

    விடுதலை கிடைக்கும் வரை திருமணத்தில் உடன்பாடு இல்லை: தாயாரை சமாதானப்படுத்திய பேரறிவாளன்

    விடுதலை கிடைக்கும் வரை திருமணத்தில் உடன்பாடு இல்லை என கூறி பேரறிவாளன் தனது தாயாரை சமாதானம் செய்தார்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே பழைய ஜோலார்பேட்டை கே.கே.சி.தங்கவேல் தெருவை சேர்ந்தவர் குயில்தாசன் (வயது 76). இவரது மனைவி அற்புதம்மாள் (68). இவர்களுக்கு அன்புமணி (48), பேரறிவாளன் (46) என்ற 2 மகன்களும், அருள்செல்வி (44) என்ற மகளும் உள்ளனர்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் 19 வயதில் இருந்து சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். பல சட்ட போராட்டங்களுக்கு பிறகே நேற்று முன்தினம் அவருக்கு பரோல் கிடைத்தது. செப்டம்பர் 23-ந் தேதி வரை 30 நாள் அவருக்கு பரோல் வழங்கப்பட்டது.

    இதனையடுத்து இரவு 10-30 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் அவரது வீட்டிற்கு வந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ளவர்கள் அவரை ஆரத்தி எடுத்து, சால்வை அணிவித்து வரவேற்றனர். அங்கு தாயாரை கண்டதும் பேரறிவாளன் கட்டி அணைத்து கொண்டார்.

    பேரறிவாளன் வீட்டு முன்பு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பேரறிவாளனை பார்க்க வரும் உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களிடம் வருகை பதிவேட்டில் அவர்களது முகவரி பதிவு செய்து, கையெழுத்து போட்ட பிறகு அனுமதி வழங்கப்படுகிறது. செல்போன்கள் உள்ளே எடுத்து செல்ல அனுமதி இல்லை.

    இந்த நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எனது மகன் பரோல் கிடைத்து வீட்டிற்கு வந்துள்ளார். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. எனது மகன் வீட்டிற்கு வந்ததும் நாங்கள் யாரும் இரவு முழுவதும் தூங்கவில்லை. அவரது தந்தை மகனை பார்த்த மகிழ்ச்சியில் பாதி நோய் குணமாகிவிட்டது. எனக்கு இருந்த நோய் முற்றிலும் குணமாகிவிட்டது போல் உணர்கிறேன்.

    என் மகன் 19 வயதில் சிறை சென்று விட்டதால் வீதிகள் எல்லாம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடு கண்டுபிடிக்க சற்று சிரமமாக இருந்ததாக தெரிவித்தார்.

    மேலும் என்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்க மிகவும் ஆசையாக உள்ளது. என் மகனுக்கு நிரந்தர விடுதலை கிடைக்க வேண்டும். மகன் அருகிலேயே இருந்தால் அவரது தந்தை முழுமையாக குணமடைவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    தாயாரின் விருப்பத்தை கண்டு நெகிழ்ந்த பேரறிவாளன் தற்போதைய சூழலில் திருமணம் செய்தால் தன்னை திருமணம் செய்யும் பெண்ணின் வாழ்க்கை பாதிக்கும். விடுதலை கிடைக்கும் வரை திருமணத்தில் உடன்பாடு இல்லை என கூறி அவரது தாயாரை சமாதானம் செய்தார்.



    Next Story
    ×