search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள ஓட்டலை காலி செய்து சுற்றுலா பயணிகள் ஓட்டம்
    X

    எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள ஓட்டலை காலி செய்து சுற்றுலா பயணிகள் ஓட்டம்

    புதுவை ஓட்டலில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள ஓட்டலை சுற்று பயணிகள் காலி செய்து வேறு ஓட்டலுக்கு செல்கிறார்கள்.
    புதுச்சேரி:

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள புதுவை வின்ட்பிளவர் ஓட்டலில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் தினகரன் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தார்.

    பதிலுக்கு தினகரன் ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் கொடும்பாவியை எரித்தனர். இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.

    நேற்றைய போராட்டம் காரணமாக ஓட்டலில் இருந்து 100 மீட்டருக்கு முன்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. ஓட்டலுக்கு வரும் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது.

    மேலும் ஓட்டலின் பிரதான நுழைவு வாயில் இழுத்து மூடப்பட்டு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அதைத்தாண்டி உள்ளே செல்பவர்களை பல்வேறு விசாரணைக்கு உட்படுத்துகிறார்கள்.

    ஓட்டலில் தங்கி இருக்கும் மற்ற சுற்றுலா பயணிகள் வெளியில் வந்து சுற்றுலா இடங்களை பார்த்துவிட்டு ஓட்டலுக்குள் செல்லும்போது இதேபோல சோதனைக்கும், விசாரணைக்கும் ஆளாகிறார்கள்.

    தனிமையில் அமைதியான முறையில் தங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதுபோன்ற ஓட்டல்களுக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். ஆனால் இங்குள்ள கெடுபிடியால் அது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் ஓட்டலில் தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்களாலும், அவர்களின் ஆதரவாளர்களாலும் ஓட்டல் வளாகத்துக்குள்ளும் அமைதியான சூழ்நிலை இல்லை.

    இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பலர் ஓட்டலை காலி செய்துவிட்டு வேறு ஓட்டலுக்கு சென்றுவிட்டனர். இன்றும் இதே நிலைமை நீடித்தால் இந்த ஓட்டலுக்கு வருகிற சுற்றுலா பயணிகளும் இங்கு தங்காமல் வெளியேறும் நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஓட்டல் நிர்வாகத்தினர் கடும் குழப்பத்தில் உள்ளனர்.
    Next Story
    ×