search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகேஷ் கண்ணா
    X
    முகேஷ் கண்ணா

    நீட் தேர்வில் மாநில அளவில் 2-வது இடம்: டாக்டராக வேண்டும் என்ற எனது கனவு நனவானது - முகேஷ் கண்ணா

    நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் ரேங்க் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் கோவை பொன்னையராஜபுரம் பகுதியை சேர்ந்த மாணவர் முகேஷ் கண்ணா மாநில அளவில் 2-வது இடம் பிடித்துள்ளார்.
    கோவை:

    நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் ரேங்க் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் கோவை பொன்னையராஜபுரம் பகுதியை சேர்ந்த மாணவர் முகேஷ் கண்ணா மாநில அளவில் 2-வது இடம் பிடித்துள்ளார். அவர் 655 மார்க் பெற்றுள்ளார்.

    மாணவர் முகேஷ் கண்ணாவின் தந்தை பெயர் மணிகண்டன். தொழில் அதிபரான இவர் பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வருகிறார். தாய் கீதா மாநகராட்சி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு முகேஷ் கண்ணா ஒரே மகன் ஆவார்.

    நீட் தேர்வில் 2-வது இடம் பிடித்தது குறித்து முகேஷ் கண்ணா நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 2015-ம் ஆண்டில் பிளஸ்-2 தேர்வு எழுதினேன். அதில் 1165 மார்க் எடுத்திருந்தேன். மருத்துவ கட் ஆப் 193.75 ஆக இருந்தது. ஆனால் டாக்டர் சீட் கிடைக்கவில்லை. என்ஜினீயரிங் கட் ஆப் 199.25 இருந்தது.

    இதனால் கோவையில் பிஎஸ்ஜி கல்லூரியில் மெக்கானிக் என்ஜினீயரிங் படித்தேன். ஆனால் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பதே எனது வேட்கையாக இருந்தது. இதற்கிடையே நீட் தேர்வு நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் மீண்டும் டாக்டர் கனவு எனக்கு துளிர்விட்டது. எனது முடிவை பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்கள் அனுமதி கொடுத்தனர்.

    இதையடுத்து என்ஜினீயரிங் படிப்பை நிறுத்தி விட்டு சான்றிதழ் வாங்கினேன். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கோவையில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் தேர்வுக்கு தயாரானேன்.

    ஏற்கனவே எனது பெரியப்பா மதுரையில் குழந்தைகள் நல மருத்துவராக உள்ளார். அவரது மகனும் டாக்டருக்கு படித்து குழந்தைகள் நல மருத்துவத்தை ஐதராபாத்தில் தற்போது படித்து வருகிறார். எனவே நானும் இதேபோல் டாக்டராக வேண்டும் என்பது கனவாக இருந்தது. இதனால் 8 மாதமாக கடுமையாக உழைத்தேன். கடந்த மே 7-ந்தேதி நடந்த நீட் தேர்வில் கலந்து கொண்டு எழுதினேன். தற்போது இதில் மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்துள்ளேன். எனது டாக்டர் கனவு நனவாகி உள்ளது.

    கடந்த மாதம் நடந்த அகில இந்திய மருத்துவ தேர்வில் தேர்வாகி உள்ளேன். இதில் எனக்கு கோவை மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது. கடந்த மாதம் முதல் இக்கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படித்து வருகிறேன்.

    நீட் தேர்வில் 2-வது இடம் பெற்றிருந்தாலும் தொடர்ந்து கோவை மருத்துவ கல்லூரியிலேயே படிக்க விரும்புகிறேன். நீட் தேர்வு கலந்தாய்வில் கலந்து கொள்ள மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினர்.
    Next Story
    ×