search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசின் அனுமதியின்றி ஊட்டியில் தயாராகி வருகிறது கர்நாடக மாநில பூங்கா
    X

    தமிழக அரசின் அனுமதியின்றி ஊட்டியில் தயாராகி வருகிறது கர்நாடக மாநில பூங்கா

    ஊட்டியில் தமிழக அரசின் எந்த அனுமதியும் பெறாமல் கர்நாடக மாநில பூங்கா தயாராகி வருவதால் தோட்டக்கலை துறை அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. வெளி நாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர்.

    இங்கு தமிழக அரசின் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகியவை உள்ளன. இதன்மூலம் தோட்டக்கலைத்துறைக்கு பல கோடி வருமானம் கிடைத்து வருகிறது.

    இதேபோல் சுற்றுலா துறைக்கு சொந்தமான ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. இவை மூலமும் சுற்றுலாதுறைக்கு பல கோடி வருமானம் கிடைத்து வருகிறது.

    இந்த நிலையில் ஊட்டியில் தமிழக அரசின் எந்த அனுமதியும் பெறாமல் பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடக மாநில தோட்டக்கலை சார்பில் 17 ஏக்கர் பரப்பளவில் பூங்கா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த பூங்கா கடந்த 5 ஆண்டுகளாக தயார் செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த பூங்கா திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. ஓரிரு நாட்களில் திறப்பு விழா குறித்த அறிவிப்பு வெளியிட கர்நாடக அரசு காத்திருக்கிறது.

    தமிழக அரசிடம் எந்த அனுமதியும் பெறாமல் முற்றிலும் வருவாய் அடிப்படையிலேயே இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பூங்காவில் நுழைவு கட்டணமாக ரூ.25 வசூலிக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது.

    ஆனால் ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் வசூலிக்கப்படும் பெரியவர்களுக்கு தலா ரூ.20 வசூலிக்கப்படுகிறது. கர்நாடக மாநில பூங்காவின் கட்டணம் குறைவாக உள்ளது.

    மேலும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களையும், அரசு பஸ்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களையும் இங்கு கொண்டு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

    இந்த பூங்கா தொடங்கினால் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் இங்கு செல்ல வாய்ப்புள்ளது. இதன் மூலம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊட்டியில் உள்ள பூங்காகள் மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் கடுமையாக பாதிக்கும் அபாயம் இருந்து வருகிறது.

    கர்நாடக அரசின் இந்த அடாவடியான செயலால் தோட்டக்கலை துறை அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுபற்றி ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் சிலர் கூறியதாவது:-

    கர்நாடகா அரசு ஏற்கனவே காவிரியில் தண்ணீர் விட மறுத்து வருகிறார்கள். இதனால் வறட்சியில் இருந்து வரும் தமிழகத்தில் விவசாயம், குடிநீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சுற்றுலா துறையிலும் கர்நாடக மாநில அரசு கை வைத்து விட்டது. கடந்த 5 ஆண்டுகளாக ஊட்டியில் 17 ஏக்கரில் சத்தமில்லாமல் ஒரு பூங்காவை ரெடி பண்ணி வருகிறார்கள். இந்த வி‌ஷயம் தமிழக அதிகாரிகளுக்கு தெரியாமல் இருந்துள்ளது வேதனையாக உள்ளது. கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல் படுகிறார்களோ என்ற சந்தேகம் இருந்து வருகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×