search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனியில் நடக்க இருந்த தினகரன் அணியின் பொதுக்கூட்டம் ரத்து
    X

    தேனியில் நடக்க இருந்த தினகரன் அணியின் பொதுக்கூட்டம் ரத்து

    தேனியில் டி.டி.வி. தினகரன் அணியினர் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மேடை அமைக்கும் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
    தேனி:

    அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்தார். அதன்படி மதுரை மாவட்டம் மேலூரில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதனையடுத்து தேனி மாவட்டம் போடி விலக்கில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வந்தது. வரும் 29-ந் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என மாவட்டம் முழுவதும் பேனர்கள் வைத்து விளம்பரம் செய்யப்பட்டன. மாவட்ட எஸ்.பி.யிடமும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தது. இதனை தமிழகம் முழுவதும் பெருவாரியான தொண்டர்கள் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடத்தினால் அது தினகரன் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அவரது ஆதரவாளர்கள் நினைத்துள்ளனர்.

    எனவே தேனியில் நடக்க இருந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேடை அமைக்கும் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×