search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புளூ வேல் விபரீதம்: மாணவர்களின் இணையதள பயன்பாட்டை கண்காணிக்க ஆசிரியர்களுக்கு அறிவுரை
    X

    புளூ வேல் விபரீதம்: மாணவர்களின் இணையதள பயன்பாட்டை கண்காணிக்க ஆசிரியர்களுக்கு அறிவுரை

    புளூ வேல் என்ற ஆபத்தான இணையதள விளையாட்டில் மாணவர்கள் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் அவர்களின் இணையதள பயன்பாட்டை கண்காணிக்கும்படி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    ‘புளூவேல்’ என்ற இணையதள விளையாட்டு உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இந்த விளையாட்டை கம்ப்யூட்டர், செல்போன்களில் விளையாடும் இளைஞர்கள், சிறுவர்கள் அந்த விளையாட்டிற்கு அடிமை ஆகும் அளவுக்கு அந்த விளையாட்டு விபரீதமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் ‘புளூவேல்’ ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுபவர்கள் மனதில் தற்கொலை எண்ணத்தை தூண்டிவிட்டு முடிவில் அவர்கள் தற்கொலை செய்யும் நிலை உருவாவதாக புகார் எழுந்துள்ளது. இது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் சிலரின் மரணங்களும் நடந்துள்ளது.

    இந்தியாவிலும் ‘புளூவேல்’ இணைதள விளையாட்டிற்கு பல இளைஞர்கள் அடிமையாகி தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவலும் வந்தவண்ணம் உள்ளது. கேரளாவிலும் சிலர் இந்த விளையாட்டில் ஈடுபட்டு தற்கொலை செய்துகொண்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ‘புளூவேல்’ விளையாட்டு விபரீதமாவதை தடுப்பதற்காக இதை தடை செய்யும்படி மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. நிர்வாகமும் மாணவர்கள் இதில் சிக்கி உயிர் இழப்பதை தடுக்க கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது. இதுதொடர்பாக சுற்றறிக்கைகளும் அனுப்பப்பட்டுள்ளது.

    மாணவர்கள் இன்டர்நெட் பயன்படுத்துவது தொடர்பாக தனியாக பள்ளிகள் விதிமுறைகளை உருவாக்க வேண்டும், பள்ளிக்கூடங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் பாதுகாப்பு வசதிகளை கட்டாயம் மேற் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    மாணவர்கள் பயன்படுத்துகிற இணையதளங்களை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். அவர்கள் பயன்படுத்த போகும் இணைய தளங்களை முன்பே தேர்வு செய்து அதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தேவை இல்லாத இணைய தளங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு இணையதள பாதுகாப்பு பற்றி பயிற்சி அளிக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டர்களை ஒதுக்குப் புறமான இடங்களில் அமைக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாடுகளை மீறுகிற மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்ட செல்போன்களைதான் பயன்படுத்துகிறார்களா? சமூக வலைதளங்களில் போலியான கணக்குகளை தொடங்கி உள்ளார்களா? என்பதையும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
    Next Story
    ×