search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் பொய்கையில் அரசு பஸ் கவிழ்ந்து 3 வயது குழந்தை பலி
    X

    வேலூர் பொய்கையில் அரசு பஸ் கவிழ்ந்து 3 வயது குழந்தை பலி

    வேலூர் பொய்கையில் அரசு பஸ் கவிழ்ந்து 3 வயது ஆண் குழந்தை பலியானது. இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 4 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
    அணைக்கட்டு:

    வேலூர் பொய்கையில் அரசு பஸ் கவிழ்ந்து 3 வயது ஆண் குழந்தை பலியானது. இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 4 பேர்  வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    வேலூர் பொய்கையை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 26). தொழிலாளி. இவரது ஆண் குழந்தை அவினாஷ் (3). முனியப்பன் தனது குழந்தையுடன், ஓசூர் சென்றிருந்தார்.

    நேற்று இரவு ஓசூரில் இருந்து வேலூர் நோக்கி வரும் அரசு பஸ்சில் ஊர் திரும்பினார். பஸ்சில் முனியப்பனுடன் சேர்த்து 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    பஸ்சை டிரைவர் விநாயக மூர்த்தி என்பவர் ஓட்டினார். வேலூர் அடுத்த கணியம்பாடி கம்மவான்பேட்டையை சேர்ந்த சம்பத் (32) என்பவர் கண்டக்டராக இருந்தார்.

    நள்ளிரவு 1.230 மணிக்கு வேலூர் பொய்கை பகுதிக்கு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, இறங்குவதற்காக முனியப்பன் குழந்தையை தூக்கி கொண்டு இருக்கையில் இருந்து எழுந்தார்.

    பஸ் படிக்கட்டு அருகே வந்து நின்றார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையின் மேம்பாலத்தின் அடியில் உள்ள சர்வீஸ் சாலையில் பொய்கை பஸ் நிறுத்தம் உள்ளது.

    ஆனால், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சர்வீஸ் சாலைக்கு பஸ் திரும்பாமல், மேம்பாலம் மீது வேகமாக ஏற முயன்றது. முனியப்பன், சர்வீஸ் சாலைக்கு பஸ்சை திருப்புமாறு டிரைவரிடம் சத்தம் போட்டார்.

    மேம்பாலம் மீது ஏற வேண்டிய சில நொடியில் பஸ்சை, சர்வீஸ் சாலைக்கு டிரைவர் திடீரென வளைத்து திருப்பினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சர்வீஸ் சாலையோரம் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் படிக்கட்டில் நின்றிருந்த முனியப்பன், அவரது குழந்தை அவினாஸ், கண்டக்டர் சம்பத் மற்றும் சக பயணிகள் பார்த்திபன் (25), ஏசுமணி (50) ஆகிய 5 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர்.

    படுகாயமடைந்த குழந்தை அவினாஷ் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. முனியப்பன் உள்பட மற்ற 4 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    தகவலறிந்து வந்த விரிஞ்சிபுரம் போலீசார், குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×