search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 892 கன அடியாக குறைந்தது
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 892 கன அடியாக குறைந்தது

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 8 ஆயிரத்து 892 கன அடியாக குறைந்தது. நீர் திறப்பை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 48.77 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று 50.83 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் அணை நீர்மட்டம் 2.6 அடி உயர்ந்தது.

    இந்த நிலையில் நேற்று காலை 15 ஆயிரத்து 973 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 8 ஆயிரத்து 892 கன அடியாக குறைந்தது. அணை நீர்மட்டம் 51.83 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர் திறப்பை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து நீர்வரத்து இல்லாமல் இருந்தபோது மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் முகாமிட்டிருந்த மீனவர்கள் வேலைத் தேடி வெளியூர்களுக்கு சென்றனர். தற்போது அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியதால் மீண்டும் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்காக மீனவர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்பினர். அடிப்பாலாறு, கோட்டையூர், பண்ணவாடி, ஏமனூர், நாகமரை பகுதிகளில் மீனவர்கள் முகாம்களை அமைத்து வருகின்றனர்.

    மீனவர்கள் வருகை காரணமாக வெறிச்சோடி கிடந்த காவிரிக்கரையில் மக்கள் நடமாட்டம் மீண்டும் காணப்படுகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் காவிரிக்கரையில் விவசாயிகள் பயிர் செய்திருந்த பயிர்கள் நீரில் மூழ்க தொடங்கின. நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் விவசாயிகள் தங்களுடைய பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் போனதாக தெரிவித்தனர். தங்களது பயிர்கள் மூழ்கினாலும் அணைக்கு தண்ணீர் வந்தது விவசாயிகளை மகிழச்சியடைய செய்துள்ளது.

    Next Story
    ×