search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 23-ந்தேதி பா.ஜனதா தலைவர் அமித்ஷா மீனவர் வீட்டில் உணவருந்துகிறார்
    X

    சென்னையில் 23-ந்தேதி பா.ஜனதா தலைவர் அமித்ஷா மீனவர் வீட்டில் உணவருந்துகிறார்

    சென்னையில் வருகிற 23-ந்தேதி பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மீனவர் வீட்டில் காலை உணவருந்துகிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் பா.ஜனதா கட்சியை பலப்படுத்துவதற்காக தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 22-ந்தேதி சென்னை வருகிறார். காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வரும் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்படுகிறது.

    அதன் பிறகு பாரிமுனை ரிசர்வ் வங்கி எதிரே உள்ள துறைமுக விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு கட்சி முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

    தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் கட்சியை பலப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    பின்னர் மாலை 4.30 மணிக்கு மயிலாப்பூர் சவேரா ஓட்டலில் பா.ஜனதா கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்குகிறார். அதை தொடர்ந்து இரவு துறைமுக விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    மறுநாள் (23-ந்தேதி) காலை 9 மணிக்கு திருவல்லிக்கேணி நடுக்குப்பம் மீனவர்கள் வசிக்கும் பகுதிக்கு வருகிறார். அங்கு மீனவரணி நிர்வாகி சதீஷ்குமார் வீட்டில் காலை உணவருந்துகிறார்.

    இட்லி, தோசை, குழிப் பனியாரம், மெதுவடை, சாம்பார், 3 வகை சட்னி, கேரட் அல்வா, கேசரி பரிமாறப்படுகிறது. அங்கு தரையில் அமர்ந்து அதனை அமித்ஷா ருசித்து சாப்பிட உள்ளார்.

    மேலும் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்பட 7 பேர் உணவருந்துகிறார்கள். பின்னர் அங்கு பா.ஜனதா கிளை அலுவலகத்தை திறந்து வைத்து கொடியேற்றுகிறார்.

    அதை தொடர்ந்து 10 மணிக்கு விவேகானந்தர் இல்லத்திற்கு அமித்ஷா செல்கிறார். அங்கு புகைப்பட கண்காட்சியை பார்வையிடுகிறார். மாலை கோவை புறப்பட்டு செல்கிறார்.

    அமித்ஷா மீனவர் வீட்டில் காலை உணவருந்துவது குறித்து மீனவர் சதீஷ்குமார் கூறியதாவது:-

    தேசிய தலைவர் அமித்ஷா எங்களது வீட்டில் காலை உணவு அருந்துவது மகிழ்ச்சியை தருகிறது. அவருக்காக எங்களது வீட்டில் இட்லி, தோசை, கேசரி, அல்வா, விதவிதமான சட்னி, சாம்பார் தயார் செய்ய இருக்கிறோம். அதிகாலையிலேயே எழுந்து தயார் செய்து விடுவோம். ருசியாக சமைத்து அமித்ஷாவுக்கு வழங்குவோம். எங்களது வீட்டு உணவை அமித்ஷா சாப்பிடுவது எங்களுக்கும், மீனவர்களுக்கும் பெருமையை தருகிறது.

    அமித்ஷாவின் எளிமையை இது காட்டுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் பா.ஜனதா கட்சி வளர்ச்சி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×