search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர் 3 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு
    X

    காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர் 3 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு

    காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறி உள்ளார்.
    சென்னை:

    தமிழகம்-புதுவையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய பகுதிகளில் மழை பெய்தாலும், வட தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதன் பிறகு சிறு தூறலாக ஆரம்பித்த மழை போகப்போக பலத்த மழையாக பெய்தது.

    சென்னை கே.கே.நகர், கோயம்பேடு, அம்பத்தூர், ஆவடி, கீழ்ப்பாக்கம், எழும்பூர், கொளத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, மயிலாப்பூர், திருவெற்றியூர், வண்ணாரப்பேட்டை உள்பட சென்னையின் பல பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்துக்கு கனமழை பெய்தது.

    அதன்பிறகு தொடர்ந்து விட்டு விட்டு மழை தூறல் விழுந்து கொண்டே இருந்தது. இரவு 9 மணிக்கு பிறகு மீண்டும் கனமழை விட்டு விட்டு பெய்தது. நள்ளிரவிலும் தொடர்ந்து மழை விடிய விடிய பெய்து கொண்டே இருந்தது.

    இதனால் சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டது.

    சென்னையின் நீர்பிடிப்பு பகுதியான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் பகுதிகளிலும் கனமழை பெய்ததால் ஏரிக்கு மழைநீர் வந்துகொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு மட்டும் 186 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

    இதேபோல் தமிழ்நாடு முழுவதும் பரவலாக நேற்றிரவு மழை பெய்துள்ளது. மேட்டூர் அணை பகுதியில் பெய்த மழையால் 21947 கன அடி மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டி உள்ளது.

    இதுபற்றி சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வட தமிழகம் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. சில இடங்களில் கனமழை பெய்தது.

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது.

    கேளம்பாக்கம் ஆர்.கே. பேட்டையில் 7 செ.மீ., சென்னை விமான நிலையம் 6. செ.மீ., மைலாப்பூர், பூந்தமல்லி, மாதவரம், ரெட்கில்ஸ், கிண்டி, தாம்பரம், செங்கல்பட்டில் 5. செ.மீ. மழை பெய்துள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் ஒருசில பகுதியிலும், தென் தமிழகத்தில் சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.

    வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மழையின் அளவு குறையும். சென்னையில் மழை தூறல் இருக்கும். இரவில் சில பகுதியில் மழை பெய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×