search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருப்புநாள் கடைபிடிப்போம்: பி.ஆர்.பாண்டியன்
    X

    எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருப்புநாள் கடைபிடிப்போம்: பி.ஆர்.பாண்டியன்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை திருவாரூர் மாவட்டத்திற்கு வருகிறார். அவரது வருகையை கருப்புநாளாக கடைபிடிப்போம் என பி.ஆர். பாண்டியன் கூறினார்.
    மன்னார்குடி:

    தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டெல்டாவில் கடந்த 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடியையும், சென்ற ஆண்டு சம்பா சாகுபடியையும் இழந்த விவசாயிகள் நடப்பு ஆண்டிலும் சம்பா சாகுபடியை இழக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு முரணாகவும், சுப்ரீம் கோர்ட்டில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள வழக்கு விசாரணையை திசை திருப்பும் விதமாகவும் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இதன் மூலம் காவிரி டெல்டாவை புறக்கணிக்கும் முதல்-அமைச்சரின் நடவடிக்கை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. விவசாயிகள் ஒன்று பட்டு போராடி வரும் நிலையில் அதனை பிளவுப்படுத்தும் வகையில் செயல்படுகிறார்.

    பவானி சாகர் அணை திறப்பு விவகாரத்தில் கொங்கு மண்டல விவசாயிகள் மத்தியில் திட்டமிட்டு பிளவை உருவாக்கினார்.

    பிரதமரிடம் காவிரி நீர் குறித்து பேச அச்சப்படும் முதல்-அமைச்சர் மழையால் கிடைக்கும் தண்ணீரை சேமித்து டெல்டாவில் ஒரு போக சம்பா சாகுபடி செய்வதற்கு கூட வாய்ப்பில்லாத சூழலை உருவாக்கி உள்ளார்.

    நாளை அவர் திருவாரூர் மாவட்டத்திற்கு வருவதை கண்டிக்கிறோம். அவரது வருகையை கருப்பு நாளாக கடை பிடிப்போம்.

    காவிரியின் குறுக்கே ராசி மணல், மேகதாதுவில் அணை கட்ட ஆட்சேபனை இல்லை எனவும், உரிய தண்ணீரை விடுவிக்க உத்தரவாதம் வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் கேட்பதும் தமிழக விவசாயிகளுக்கு பலன் அளிக்காது.

    இது தொடர்பாக அனைத்து கட்சிகள், விவசாயிகள் சங்க கூட்டத்தை தமிழக அரசு கூட்டி தெளிவுபடுத்த வேண்டும்.

    இவ்வாறு பி.ஆர். பாண்டியன் கூறினார்.
    Next Story
    ×