search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் கிரானைட்- மணல் கொள்ளைகள் அதிகரிப்பு: நல்லக்கண்ணு குற்றச்சாட்டு
    X

    தமிழகத்தில் கிரானைட்- மணல் கொள்ளைகள் அதிகரிப்பு: நல்லக்கண்ணு குற்றச்சாட்டு

    தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் கிரானைட், தாது மணல் கொள்ளைகள் அதிகரித்துள்ளது என இந்திய கம்யூனிஸ்டு மாநில முன்னாள் செயலாளர் நல்லகண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.
    மேலூர்:

    கிரானைட் கொள்ளை தொடர்பான சகாயம் கமிட்டியை கலைக்கக் கூடாது. விசாரணை அதிகாரி சகாயம் மற்றும் அவரது குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையை அடுத்த மேலூரில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்திய கம்யூனிஸ்டு மாநில முன்னாள் செயலாளர் நல்லகண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் காளிதாஸ், மாநிலக்குழு மகேந்திரன், மெய்யர் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டம் முடிந்ததும் நல்லகண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    மேலூரில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி சகாயம் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர்.

    இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் ரூ. 1 லட்சத்து 9 ஆயிரம் கோடி மதிப்பில் கிரானைட் முறைகேடுகள் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதற்கு கனிம வளத்துறை, பொதுப் பணித்துறை, வருவாய்த் துறை மற்றும் அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர். ஐகோர்ட்டில் கிரானைட் முறைகேடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்த சகாயம் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறினார். எனவே அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கும் வரை சகாயம் குழுவை தமிழக அரசு கலைக்கக்கூடாது. அவரது குழுவினருக்கு சம்பளம் வழங்க வேண்டும்.

    தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் கிரானைட் முறைகேடு நடந்துள்ளது. இதே போல் மணல், தாது மணல் கொள்ளையும் அதிகரித்துள்ளது. இதில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×