search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்திருந்த மாணவ-மாணவிகள்.
    X
    கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்திருந்த மாணவ-மாணவிகள்.

    நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கூடாது: கோவை கலெக்டர் அலுவலகத்தில் மாணவ-மாணவிகள் போராட்டம்

    ‘‘நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கூடாது’’ என்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து மாணவ-மாணவிகள் போராட்டம் ஈடுபட்டனர்.
    கோவை:

    நீட் தேர்வுக்கு ஆதரவாக கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பெற்றோர்களுடன் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கூடாது. நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

    இதுபற்றி ஈரோடு மாவட்டம் பெருந்துறை கரத்தூர் பகுதியை சேர்ந்த மாணவி ஹரிபிரியா கூறியதாவது:-

    நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவள். கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீட் தேர்வுக்கு ஓராண்டுக்கு தான் விலக்கு அளிக்க முடியும் என கூறியது. இதனால் நீட் தேர்வுக்கு தயாராகி தேர்வை எழுதினோம்.

    தற்போது நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து அவசர சட்டம் நிறைவேற்றினால் எங்களது வாழ்க்கை தரம் பாதிக்கப்படும். மேலும் நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் மற்ற மாணவ-மாணவிகள் கூறும் போது, ‘‘நீட் தேர்வுக்கு விலக்கு கேட்கும் தமிழக அரசு எதற்காக நீட் தேர்வை நடத்தினார்கள்? என்று தெரியவில்லை’ என்றனர்.

    இதற்கிடையே மாணவ-மாணவிகளின் பெற்றோர் கூறும் போது, ‘‘நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து அவசர சட்டம் நிறைவேற்றினால் இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம்’ என்றனர்.

    இதற்கிடையே இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் நேராக கூட்டரங்குக்கு சென்று விட்டனர்.

    இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர், ‘உடனடியாக கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஏற்கனவே பலமுறை கலெக்டரை சந்தித்து மனு அளித்து விட்டோம். இந்த முறை இதற்கு தீர்வு கிடைக்காமல் இடத்தை விட்டு நகர மாட்டோம்’ என்று தெரிவித்தனர்.

    மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் லட்சுமி ஆகியோர் விரைந்து வந்து போராட்டம் நடத்திய மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர்கள், ‘‘உள்ளாட்சி தேர்தல் குறித்த கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொண்டு உள்ளார். எனவே மதியம் 1 மணியளவில் கலெக்டரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர்.

    ஆனால் இதை ஏற்க மறுத்து, கலெக்டர் உடனடியாக இங்கே வர வேண்டும்’ என்றனர்.

    இதன்பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு இடத்தில் அவர்கள் அமர்ந்து கோ‌ஷமிட்டப்படி உட்கார்ந்து இருந்தனர்.




    Next Story
    ×