search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதை படத்தில் காணலாம்.
    X
    மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதை படத்தில் காணலாம்.

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருமடங்குக்கு மேல் அதிகரித்து 21 ஆயிரத்து 947 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து 700 கனஅடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது.
    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மழை நீர் கலந்து செந்நிறமாக வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,500 கனஅடியாக அதிகரித்தது.

    இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து நேற்று வினாடிக்கு 15,000 கனஅடியானது. இன்று 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    மேலும் ஆற்று நீருடன், மழை நீரும் கலந்து வருவதால் ஐவர் பாணி, சினிபால்ஸ், மினி அருவி, மெயின் அருவி ஆகிய இடங்களில் சேறும், சகதியும் கலந்து தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மெயின் அருவியில் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க கடந்த 15-ந் தேதி முதல் தடைவிதிக்கப்பட்டது. இந்த தடை இன்று 3-வது நாளாக நீடித்தது.

    தமிழக பகுதிகளில் பரிசல் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஒரு சில பரிசல் ஓட்டிகள் ஆட்டோக்களில் தங்களது பரிசல்களை எடுத்து சென்று கர்நாடக பகுதியில் உள்ள ஆலம்பாடி ஆற்றுப் பகுதியில் சுற்றுலா பயணிகளை பரிசல் சவாரி செய்ய அழைத்து செல்கிறார்கள். இதையறிந்த அதிகாரிகள் பரிசல் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது தடையை மீறி ஆற்றின் வேறுபகுதிக்கு பரிசலை கொண்டு சென்று இயக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் அருவியில் அதிகரித்து வரும் தண்ணீரையும், பரிசல்கள் வேறு இடத்தில் இயக்கப்படுகிறதா? என்பதையும் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகாரித்து நேற்று 10,535 கனஅடியானது.

    இன்று மேலும் நீர்வரத்து இருமடங்குக்கு மேல் அதிகரித்து 21 ஆயிரத்து 947 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து 700 கனஅடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை விட அணைக்கு பலமடங்கு தண்ணீர் அதிகமாக வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 45.71 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 3 அடி அதிகரித்து 48.77 அடியாக உயர்ந்தது.

    இந்த நிலையில் மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரையில் கால்வாய் பகுதிகளில் குடிநீர் மற்றும் கால்நடை தேவைகளுக்காக இன்று முதல் வருகிற 29-ந் தேதி வரை 12 நாட்கள் வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் வீதம் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்று மாலை திறந்து விடப்படுகிறது.

    பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்வதால் அங்குள்ள பெரும்பாலான பகுதிகள் வெள்ளகாடாக காட்சியளிக்கிறது. இந்த மழை நீர் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 900 கனஅடி வீதம் வருகிறது.

    இதையடுத்து ஓசூர் அருகே உள்ள தென் பெண்ணையாற்றில் கெலவரப்பள்ளி அணையில் இருந்து 800 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இதனால் தென் பெண்ணை ஆற்றின் அருகே உள்ள பாத்தகோட்டா ஆற்றில் தண்ணீர் நிரம்பி வழிந்து தரைப்பாலத்தில் 2 அடி உயரத்திற்கு பாய்ந்து செல்கிறது.

    இதனால் பாத்த கோட்டா மற்றும் ராமபுரம், ஆளியாளம், போடூர், உக்கலப்பள்ளி, நாயக்கனபள்ளி ஆகிய 6 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறும், தரைபாலத்தில் யாரும் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×