search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமலஹாசன் கூறும் ஊழல் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும்: தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. பேட்டி
    X

    கமலஹாசன் கூறும் ஊழல் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும்: தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. பேட்டி

    கமலஹாசன் தமிழக அரசின் மீது கூறும் ஊழலை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்று தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
    ஆண்டிப்பட்டி:

    தமிழக அரசு அனைத்து துறைகளிலும் ஊழலில் சிக்கித் தவிப்பதாகவும் எனவே இதற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கமலஹாசன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வும், டி.டி.வி. தினகரன் ஆதரவாளருமான தங்க தமிழ்செல்வன் இது குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கமலஹாசன் பொதுவாக ஊழல் என்று கூறுவதை ஏற்க முடியாது. அவர் உண்மையிலேயே ஊழல் நடந்திருக்கிறது என்று கூறும் ஆதாரத்தை வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால் அது குறித்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு வலியுறுத்தப்படும். அரசியல் பரபரப்புக்காக இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறக் கூடாது.

    குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தினகரன் மீது அபாண்டமான பழியை சுமத்தி வருகிறார். முதன் முதலில் சசிகலாவை பொதுச் செயலாளராக ஆக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவரே இவர்தான். தற்போது வேறு ஏதோ காரணங்களுக்காக சசிகலா மீதும் தினகரன் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

    மேலூரில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு வராமல் இருக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் கடத்தப்பட்டதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்தார். இது பொய்யான குற்றச்சாட்டு அல்ல. உண்மைதான். வரும் 29-ந் தேதி தேனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மேலூர் கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்களை விட அதிக எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்வார்கள். இந்த கூட்டத்தில் யாரையும் கடத்த முடியாது. மேலும் அனுமதி தருவதிலும் சிக்கல் இருக்காது. தேனி பொதுக்கூட்டத்தில் 1 லட்சம் தொண்டர்களை திரட்டி மாநாடு போல நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×