search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரண்பேடி தேனீர் விருந்து: நாராயணசாமி, ஒட்டு மொத்த எம்.எல்.ஏ.க்களும் புறக்கணிப்பு
    X

    கிரண்பேடி தேனீர் விருந்து: நாராயணசாமி, ஒட்டு மொத்த எம்.எல்.ஏ.க்களும் புறக்கணிப்பு

    புதுவையில் நேற்று மாலை கவர்னர் கிரண்பேடி தேனீர் விருந்து அளித்தார். இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.க்களும் புறக்கணித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு கவர்னர் தேனீர் விருந்து அளிப்பது வழக்கம். இதில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அனைத்து கட்சி தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்.

    சுதந்திரதினத்தையொட்டி நேற்று மாலை கவர்னர் கிரண்பேடி கவர்னர் மாளிகையில் தேனீர் விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி சென்றார். கவர்னர் கிரண்பேடி அவரை வரவேற்றார்.

    அவருக்கு சுதந்திரதின வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி விருந்து நடக்கும் இடத்திற்கு சென்று தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தார். அப்போது கவர்னர் கிரண்பேடி மற்ற பிரமுகர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து கொண்டிருந்தார்.

    அந்த நேரத்தில் கவர்னரின் செயலாளர் தேவநீதிதாஸ் முதல்-அமைச்சர் அருகே வந்து அமர்ந்தார். உடனே முதல்-அமைச்சர் நாராயணசாமி நான் புறப்படுகிறேன் என்று கவர்னரின் செயலாளரிடம் கூறினார். அதற்கு கவர்னரின் செயலாளர் டீ சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் என்று கூறி கவர்னர் மாளிகை ஊழியரை டீ கொண்டு வருமாறு கூறினார். உடனே ஊழியர் டீ எடுத்து வந்தார்.

    ஆனால் முதல்-அமைச்சர் நாராயணசாமி நான் டீ கேட்கவில்லையே என்று கூறிவிட்டு அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தார். வேறு எதுவும் சாப்பிடவில்லை.

    உடனேயே அங்கிருந்து புறப்பட்டு நடந்தே கவர்னர் மாளிகையை விட்டு வெளியே வந்தார். அங்கிருந்த தனது காரில் ஏறி சென்றுவிட்டார்.

    மேலும், எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி விருந்தில் பங்கேற்காமல் புறக்கணித்தார். அதேபோல காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாக இந்த விருந்தில் பங்கேற்கவில்லை.

    பாரதீய ஜனதா தலைவரும், நியமன எம்.எல்.ஏ.வுமான சாமிநாதன் மட்டும் இந்த விருந்தில் பங்கேற்றார். மேலும் தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், கலெக்டர் சத்தியேந்திரசிங் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.

    புதுவையில் கவர்னர் கிரண்பேடிக்கும், அமைச்சரவைக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. மேலும் எம்.எல்.ஏ.க்கள் பலரும் கவர்னருக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள்.

    எனவே தான் அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.க்களோ இந்த விருந்தில் பங்கேற்கவில்லை. முதல்-அமைச்சர் நாராயணசாமி மரியாதைக்காக சென்றுவிட்டு உடனேயே அங்கிருந்து வெளியே வந்துவிட்டார்.

    Next Story
    ×