search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல் ஐந்தருவியில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி.
    X
    ஒகேனக்கல் ஐந்தருவியில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி.

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் 44.21 அடியிலிருந்து 45.71 அடியாக உயர்ந்துள்ளது.
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் மழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    இதனால் இந்த 2 அணைகளிலிருந்தும் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று முன்தினம் 6,800 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை 11,500 கனஅடியாக உயர்ந்தது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

    இன்று 2-வது நாளாக இந்த தடை நீடிக்கிறது. சுற்றுலா பயணிகள் ஆற்றின் கரையோர பகுதிகளில் குளிப்பதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பரிசல் இயக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தினை பிலிகுண்டுலுவில் 24 மணிநேரமும் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு 7,873 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று இது 7,769 கனஅடியாக குறைந்தது. இன்று காலை நீர்வரத்து அதிகரித்து 10,535 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் நீர்மட்டம் 44.21 அடியிலிருந்து 45.71 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1½ அடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    நீர் திறப்பை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


    Next Story
    ×