search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனைவியுடன் ராணுவ வீரர் இளையராஜா.
    X
    மனைவியுடன் ராணுவ வீரர் இளையராஜா.

    சிவகங்கை ராணுவ வீரரின் உடல் இன்று மதுரை வருகை: கலெக்டர்கள்-அதிகாரிகள் மரியாதை

    காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
    சிவகங்கை:

    காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் பயங்கரவாதிகளுக்கிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் குண்டடிப்பட்டு வீரமரணம் அடைந்தனர். இதில் ஒருவர் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கண்டனி கிராமத்தை சேர்ந்த இளையராஜா (வயது 26) ஆவார்.

    இவரது பெற்றோர் பெரியசாமி-மீனாட்சி. இளையராஜாவுக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தான் செல்வி (23) என்பவருடன் திருமணம் நடந்தது. தற்போது செல்வி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இளையராஜா வீரமரணம் அடைந்த செய்திகேட்டு மனைவி செல்வி, பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.

    இளையராஜாவின் உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் மதுரை வருகிறது. விமான நிலையத்தில் கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் ராணுவ அதிகாரிகள் மரியாதை செலுத்துகின்றனர்.

    பின்னர் இளையராஜா உடல் ராணுவ வாகனம் மூலம் சொந்த ஊரான கண்டனிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு சிவகங்கை கலெக்டர் மலர் விழி, போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்துகின்றனர்.

    அதனை தொடர்ந்து ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் ராணுவ படை அதிகாரி செல்வமூர்த்தி செய்து வருகிறார்.

    தங்கள் ஊரை சேர்ந்த வீரர் நாட்டுக்காக வீர மரணம் அடைந்த செய்தி கேட்டு கண்டனி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இங்கு கிருஷ்ணஜெயந்தி விழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும். இளையராஜாவின் மரணத்தால் விழா கொண்டாடப்படவில்லை.



    Next Story
    ×