search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறந்த சிறுமி வைஷ்ணவியை உறவினர்கள் பைக்கில் தூக்கி சென்ற காட்சி
    X
    இறந்த சிறுமி வைஷ்ணவியை உறவினர்கள் பைக்கில் தூக்கி சென்ற காட்சி

    டாக்டர்கள் இல்லாததால் 2 பேர் உயிரிழப்பு - ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 200 நோயாளிகள் தவிப்பு

    வேலூர் மாவட்டம் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பணியில் இல்லாததால் இருவரின் உயிர் பரிதாபமாக பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஆம்பூர்:

    ஆம்பூரின் மையப்பகுதியான நேதாஜி ரோட்டில் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு 12 டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று பெண் டாக்டர் ஒருவர் உள்பட 2 பேர் பணியில் இருக்க வேண்டும். ஆனால் ஒரு டாக்டர் மட்டும் பணியில் இருந்தார். இந்த ஆஸ்பத்திரியில் போதுமான டாக்டர்களும், வசதிகளும் இல்லை என்ற குற்றச்சாட்டு நீடித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று சென்னை வேங்கைவாசல் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (65), தி.நகரை சேர்ந்த சந்தானம் (77). ரப்பர் ஸ்டாம்ப் பிரிண்டிங் தொழில் செய்து வருகிறார். 2 பேரும் காரில் பெங்களூர் சென்று கொண்டிருந்தனர். ராஜ்குமார் காரை ஓட்டினார். மதியம் 1 மணியளவில் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற லாரியின் மீது கார் மோதியது. இதில் ராஜ்குமார், சந்தானம் படுகாயம் அடைந்தனர்.

    இருவரும் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் யாரும் இல்லாததால் அங்கிருந்த நர்ஸ் மற்றும் உதவியாளர்கள் சிகிச்சை அளித்தனர். இரண்டரை மணி நேரம் கழித்து வந்த டாக்டர் ராஜ்குமாரை பரிசோதனை செய்து பார்த்து இறந்து விட்டார் என கூறி சென்று விட்டார். சந்தானம் வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பட்டார்.

    அதே நேரம் ஆம்பூர் அடுத்த ராலக்கொத்துரை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவியான ராஜேஷ் மகள் வைஷ்ணவி (13) காய்ச்சலுக்கு சிகிச்சை பெற ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். ஏற்கனவே இருதய நோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் மாணவியை பரிசோதனை செய்ய டாக்டர் அங்கில்லை இதனால் 2 மணி நேரம் காத்திருந்த நிலையில் வைஷ்ணவி பரிதாபமாக இறந்தார்.

    இந்நிலையில் வைஷ்ணவியின் உறவினர்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் ஆஸ்பத்திரி முன்பு கூடினர். அவர்கள் விசாரணை செய்த போதும் அங்கு டாக்டர்கள் யாரும் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஆஸ்பத்திரியின் வெளி கோட்டை பூட்டு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் ஆம்பூர் டவுன் போலீசார் நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் உயர் அதிகாரிகள் வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என உறுதியாக கூறினர்.

    இதையடுத்து மாவட்ட இணை இயக்குனர் சாந்தி சம்பவ இடத்திற்கு வந்தார். அவரின் காரை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் இணை இயக்குனர் பேச்சு வார்த்தை நடத்தினார். சம்பவம் குறித்து விசாரணை செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ன உறுதி கூறினர்.

    இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

    டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சை கிடைக்காமல் இறந்த சிறுமி வைஷ்ணவியின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் இல்லாத நிலையில் அவரது உறவினர்கள் பைக்கில் ஆம்பூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள ராலக்கொத்தூர் கிராமத்திற்கு எடுத்து சென்றனர்.

    நேற்று பிற்பகலில் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகளை பணியில் இருந்த நர்ஸ் மற்றும் பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆதலால் டாக்டர்கள் விடுமுறை அதனால் நாளை வாருங்கள் என்று கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.

    பிற்பகலில் காய்ச்சல் காரணமாக சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் வந்து அரசு ஆஸ்பத்திரியில் காத்திருந்தனர். அதிக காய்ச்சல் இருந்தவர்களுக்கு பணியில் இருந்த நர்ஸ்களே சிகிச்சை அளித்து அனுப்பினர்.

    இந்த சூழலில் கருகலைந்த நிலையில் சிகிச்சைக்கு கர்ப்பிணிப் பெண் ஒருவர் வந்தார். டாக்டர்கள் இல்லாததால் அவர் மேல்சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆம்புலன்ஸ் இல்லாததால் அவரும் ஆட்டோ மூலம் குடியாத்தம் சென்றது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    இது குறித்து சுகாதார பணிகள் இணை இயக்குனர் சாந்தி கூறியதாவது:-

    ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் பரிமளாதேவி மீது பொதுமக்கள் பல்வேறு புகார்கள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் டாக்டர் பரிமளாதேவி மருத்துவ அலுவலர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக டாக்டர் கென்னடி மருத்துவ அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    டாக்டர் பரிமளாதேவி மருத்துவ சிகிச்சை பணிகளில் ஈடுபடுவார். புதிய டாக்டர் நியமிக்கப்பட்டதும் அவர் இடமாற்றம் செய்யப்படுவார்.

    மேலும் நேற்று 24 மணி நேர பணியில் இல்லாத டாக்டர் சங்கீதா பணிக்கு ஏன் வரவில்லை என்பது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.

    டாக்டர் சங்கீதா மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு 3 டாக்டர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    குடியாத்தம், திருப்பத்தூர், ஈ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் 3 டாக்டர்கள் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உ.பி.யில் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் இல்லாததால் 63 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டம், ஆம்பூரில் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பணியில் இல்லாததால் இருவரின் உயிர் பரிதாபமாக பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×