search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலையில் பலத்த மழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் மறியல்
    X

    திருவண்ணாமலையில் பலத்த மழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் மறியல்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய கன மழை பெய்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய கன மழை பெய்தது. திருவண்ணாமலை மற்றும் போளூர் பகுதியில் அடை மழை கொட்டி தீர்த்தது.

    தொடர்மழை காரணமாக, ஜவ்வாதுமலையில் இருந்து உருவாகும் செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. செய்யாற்று படுகையின் இருகரைகளை தொட்டப்படி, வெள்ள நீர் கரை புரண்டு ஓடுகிறது.

    தொடர்மழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் உள்பட ஏராளமான நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    திருவண்ணாமலை அருகே போளூர் சாலையில் உள்ள செட்டிக்குள மேடு பச்சியம்மாள் கோவில் பகுதியில் பெய்த பலத்த மழைக்கு, வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டிருந்ததால், வீடுகளுக்குள் புகுந்தது.

    இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பாத்திரங்களை கொண்டு வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை அப்புறப்படுத்தினர்.

    மேலும் அடைப்பட்டிருந்த கால்வாயை தூர்வாரக் கோரி திருவண்ணாமலை- வேலூர் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உதவி கலெக்டர் உமா மகேஸ்வரி, தாசில்தார் ரவி, டவுன் போலீசார் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பொக்லைன் எந்திரத்தை கொண்டு கால்வாயை அடைப்பை சரி செய்யும் பணியை தொடங்கினர். இதையடுத்து, மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே வேலூர் சாலையோரம் கனமழைக்கு திடீரென பெரியபள்ளம் ஏற்பட்டுள்ளது. 10 அடி நீளத்திற்கு 5 ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே பயணித்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் மில்லி மீட்டரில்:-

    செங்கம்-79.80

    போளூர்-138.80

    சாத்தனூர் அணை-58.8

    வந்தவாசி-29.20

    செய்யாறு-19.50.

    Next Story
    ×