search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐதராபாத் - திருவனந்தபுரம் ரெயிலில் ஆந்திர மந்திரி உறவினர் உள்பட 4 பயணிகளிடம் கொள்ளை
    X

    ஐதராபாத் - திருவனந்தபுரம் ரெயிலில் ஆந்திர மந்திரி உறவினர் உள்பட 4 பயணிகளிடம் கொள்ளை

    சித்தூர் அருகே ரெயிலில் ஆந்திர மந்திரி உறவினர் உள்பட 4 பயணிகளிடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஈரோடு:

    ஐதராபாத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இதில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் ஆந்திர வனத்துறை மந்திரி சித்தா ராகவ ராவின் உறவுக்கார பெண் சர்மிளா பயணம் செய்தார். இவர் திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். ஐதராபாத்தில் நடந்த மந்திரியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    நள்ளிரவில் ரெயில் சேலம் அருகே வந்தபோது ஆந்திர மந்திரியின் உறவினர் சர்மிளா உள்பட 3 பேரின் உடமைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

    சர்மளாவின் உடமைகளில் 40 பவுன் நகை இருந்தது. மற்றவர்கள் உடமையில் லேப்டாப், செல்போன் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த 3 பேரும் சேலம் ரெயில் நிலையத்தில் இறங்கி போலீசில் புகார் செய்தனர்.

    இதேபோல மற்றொரு ஏ.சி. பெட்டியில் பயணம் செய்த ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த கவிதா ஜேம்ஸ் என்ற பெண்ணுக்கு தனது கைப்பை மாயமானது சேலம் ரெயில் நிலையத்தை ரெயில் கடந்த போது தான் தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஈரோடு ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் மாயமான கைப் பையில் 11 பவுன் நகை, ஏ.டி.எம்.கார்டுகள், 7500 ரொக்கப்பணம் இருந்ததாக கூறி உள்ளார்.

    விசாரணையில் கொள்ளை சம்பவம் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், சித்தூருக்கும் இடையே நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து புகாரை சித்தூர் ரெயில்வே போலீசாருக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் ரெயில் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளையும் பயணம் செய்த பயணிகளின் விபரங்களையும் சேகரித்து வருகிறார்கள்.

    பயணிகள் போல் சென்று கொள்ளையில் ஈடுபட்டார்களா? அல்லது ரெயில் சிக்னலில் நிற்கும் போது பெட்டியில் ஏறி கொள்ளையடித்து சென்றார்களா என்றும் விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×