search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருக்கை-விசூர் சாலையில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலத்தை படத்தில் காணலாம்.
    X
    கருக்கை-விசூர் சாலையில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலத்தை படத்தில் காணலாம்.

    கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை: தரைப்பாலங்கள் அடித்து செல்லப்பட்டதால் 50 கிராமங்கள் பாதிப்பு

    கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்தது. தரைப்பாலங்கள் அடித்து செல்லப்பட்டதால் 50 கிராமங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 1½ ஆண்டுகளாக மழை பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் அவதியடைந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கடலூர் மாவட்டத்தில் இரவிலும், பகலிலும் பரவலாக மழை பெய்தது. திடீரென்று கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடி- மின்னலுடன் பலத்த மழையாக கொட்டியது.

    கடலூர், பண்ருட்டி, கீழிருப்பு, மேலிருப்பு, மேட்டுக்குப்பம், காட்டுப்பாளையம், வீசூர், முத்தாண்டிக்குப்பம், நெய்வேலி போன்ற பகுதிகளில் 4 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் ஆறு போல் ஓடியது.

    பண்ருட்டி பகுதியில் பெய்த பலத்த மழையால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கருக்கை-வீசூர் சாலையில் இருந்த தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. அதில் பதிக்கப்பட்டிருந்த குழாய்கள் உடைந்து சேதமாகின.

    மேலும் வெள்ளவாரி ஓடை பகுதியில் மழை ஏற்படும் போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்க இருபுற கரைகளில் ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அந்த மணல் மூட்டைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    அதுபோல பெரிய காட்டுப்பாளையத்தில் பெரியஓடையில் பாலம் விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வந்தது. இந்த பாலமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் இதன் அருகே பொதுமக்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக புறவழிச் சாலையும் சேதமடைந்தது.

    பாலங்கள் மழையால் அடித்துச் செல்லப்பட்டதால் பண்ருட்டியில் இருந்து சேந்தநாடு, வீசூர், பெரியக்காட்டுப்பாளையம் வழியாக நெய்வேலி செல்லக்கூடிய வாகன போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. இதனால் 50 கிராமங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.

    இந்த நிலையில் பண்ருட்டி பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடைந்த கரை பகுதிகளை பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடலூர் மற்றும் பண்ருட்டி பகுதிகளில் நேற்று நள்ளிரவும் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. சுமார் 2 மணி நேரம் பெய்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

    விசூரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்திருப்பதை விவசாயிகள் காண்பித்த காட்சி.

    இந்த தொடர் மழையால் வீசூர் மற்றும் கருக்கை, பண்ருட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெல், கம்பு, மணிலா உள்ளிட்ட பல்வேறு விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதில் 300 ஏக்கர் அளவில் பாதிப்படைந்துள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சவுக்கு தோப்புக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் பலத்த மழை பெய்த போது காட்டாற்று வெள்ளத்தில் பண்ருட்டி அருகே உள்ள வீசூர், பெரியகாட்டுப்பாளையம் ஆகிய 2 கிராம மக்கள் கடுமையாக பாதிப்படைந்தனர். அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 13 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் தற்போது அதே பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×