search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னரின் செயல்பாட்டால் புதுவையில் தொழில் தொடங்க யாரும் வரவில்லை: கந்தசாமி குற்றச்சாட்டு
    X

    கவர்னரின் செயல்பாட்டால் புதுவையில் தொழில் தொடங்க யாரும் வரவில்லை: கந்தசாமி குற்றச்சாட்டு

    புதுவை அரசின் திட்டங்களை நிறுத்துவதில் தான் கவர்னர் குறியாக உள்ளார். கவர்னரின் இத்தகைய செயல்களால் பிற தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வரவில்லை என்று கந்தசாமி குற்றம் சாட்டினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சென்னை துறைமுக கழகத்துடன் இணைந்து புதுவை துறைமுகத்தை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி சென்னை துறைமுகத்தில் இருந்து சிறிய ரக கப்பல்கள் புதுவை துறைமுகத்துக்கு வரும். இந்த கப்பல்கள் வந்து செல்ல வசதியாக துறைமுக முகத்துவாரத்தில் தூர்வாரும் பணி நடைபெற்று வந்தது.

    அதேபோல் பழைய துறைமுக வளாகத்தில் சரக்குகளை பாதுகாப்பாக வைத்து ஏற்றி - இறக்கி செல்ல குடோன்களும், அங்கிருந்து சரக்குகளை லாரியில் ஏற்றிச் செல்ல சாலை வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் ஜூன் மாதம் முதல் புதுவை துறைமுகம் இயங்கும் என அரசு அறிவித்தது. ஆனால் துறைமுகம் தூர்வாரும் பணி நிறைவடையாததால் துறைமுகம் இயங்குவது தாமதமாகி கொண்டே செல்கிறது.

    இந்த நிலையில் துறைமுக தூர்வாரும் பணியால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் கவர்னர் கிரண்பேடியிடம் புகார் மனு அளித்தது. இதையடுத்து கவர்னர் கிரண்பேடி துறைமுக விவகாரத்தில் தலையிட்டு அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்.

    துறைமுக திட்டத்துக்கு முட்டுக்கட்டையாக கவர்னர் கிரண்பேடி இருக்கிறார் என முதல்-அமைச்சர் நாராயணசாமியும், அமைச்சர் கந்தசாமியும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், ஜெயமூர்த்தி, துறைமுக செயலாளர் பார்த்திபன், செயற்பொறியாளர் ரவீந்திரன் ஆகியோர் இன்று உப்பளத்தில் உள்ள துறைமுகத்தை பார்வையிட்டனர்.

    அப்போது அங்கு செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கந்தசாமி கேட்டு அறிந்தார். அதோடு துறைமுகத்தில் இருந்து தேங்காய்திட்டு வழியாக மரப்பாலம் மூப்பனார் சிலையை சென்றடையும் வகையில் சாலை அமைப்பது குறித்து அமைச்சர் கந்தசாமி காரில் சென்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

    பின்னர் அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    துறைமுக விவகாரம் தொடர்பாக கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து பல்வேறு புகார்களை கூறி வருகிறார். துறைமுகத்தில் தூர்வாரும் பணி என்பது புதிய செயல் அல்ல. அது வழக்கமாக மேற்கொள்ளப்படும் பணிதான்.

    சென்னை துறைமுகத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி வருங்காலத்தில் 50 சதவீத செலவினங்களை சென்னை துறைமுகம் ஏற்றுக்கொள்ளும். இதற்காக சென்னை துறைமுகம் ஒரு துணை தலைமை பொறியாளரை புதுவை துறைமுகத்துக்கு அதிகாரியாக நியமித்துள்ளது. இன்னும் தேவையான அதிகாரிகள், ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    சரக்கு கப்பல் மற்றும் மீன்பிடி படகுகள் சென்றுவரும் வகையில் போக்குவரத்து கால்வாய் ஏற்படுத்தி வருகிறோம். தற்போது சரக்கு கப்பல் வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருவாரத்துக்கு ஒருமுறை மட்டுமே வந்து செல்லும். அதுவும் கார், எந்திர பாகங்கள், டயர் உள்ளிட்டவை மூடிய கண்டெய்னர் மூலமே ஏற்றுமதி- இறக்குமதி செய்யப்படும். இதனால் சுற்றுச்சூழல், சுகாதார கேடு ஏற்பட வாய்ப்பில்லை.

    புதுவை துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் வந்து செல்வதால் 200 கிலோ மீட்டருக்கு மேல் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். அதோடு சரக்குகளை இரவு 10 மணிக்கு மேல் மட்டுமே கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. சேமிப்பு கிடங்கு, துறைமுக பாதுகாப்பு ஆகியவை ஒப்பந்தம் மூலமும், வெளிச்சந்தை மூலமும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    துறைமுக இயக்குனர் பதவியை நியமிக்க கப்பல் போக்குவரத்து அமைச்சகம் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. இதற்கு யாரும் விண்ணப்பிக்காததால் இயக்குனர் பதவிக்கு பொதுப்பணித்துறையின் ஓய்வு பெற்ற தலைமை என்ஜினீயர் சாமிநாதனை நியமித்துள்ளோம். ஆனால் கவர்னர் அதனை நிராகரித்து விட்டார்.

    துறைமுகத்தையும், கடற்கரை மறுசீரமைப்பு திட்டத்தையும் தவறாக இணைத்து கவர்னர் கிரண்பேடி பொதுமக்களிடம் குறை சொல்லி வருகிறார். பல்வேறு வகைகளில் கோப்புகளை திருப்பி அனுப்பிவிட்டு ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை என கவர்னர் கிரண்பேடி பொய்யான தகவலை பரப்பி வருகிறார்.

    கடற்கரையில் பைப்லைன் மூலம் மணலை கொட்டுவது எந்த வகையில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்? கவர்னர் கிரண்பேடி முன்னுக்குப்பின் முரணாக பேசி வருகிறார். தனியார் போக்குவரத்து ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரும்புகிறார். கவர்னரின் இந்த அணுகுமுறை தொடர்ந்தால் அனைத்து மீனவர்களும் கவர்னருக்கு எதிராக திரும்புவார்கள்.

    துறைமுகம் மற்றும் விமான போக்குவரத்து திட்டத்தை புதுவை அரசு நேரடியாக செயல்படுத்தியது. இதனால் ஏற்பட்ட ஆதங்கத்தினாலேயே கவர்னர் தவறான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். புதுவை அரசின் திட்டங்களை நிறுத்துவதில் தான் கவர்னர் கிரண்பேடி குறியாக உள்ளார். கவர்னரின் இத்தகைய செயல்களால் பிற தொழில் நிறுவனங்கள் புதுவையில் தொழில் தொடங்க முன்வரவில்லை. பொதுவாக கவர்னர் புதுவையின் எதிரியாக செயல்பட்டு வருகிறார்.

    கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்ய பொதுப்பணித்துறையுடன் இணைந்து ஆய்வு செய்துள்ளோம். போர்க்கால அடிப்படையில் இதற்கான பணிகள் நடைபெறும். துறைமுகம் வருவதால் புதுவை மாநிலம் வளர்ச்சி அடைவதோடு ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற இந்த திட்டங்களை கவர்னர் கிரண்பேடி தடுக்க நினைப்பது நியாயமா? இதனை மத்திய அரசும் வேடிக்கை பார்க்க கூடாது.

    புதுவை மண்ணின் மைந்தர்களான எங்களுக்கு இருக்கும் அக்கறையை விட வெளி மாநிலத்தை சேர்ந்த கவர்னருக்கு அக்கறை இருக்குமா? உண்மையில் கவர்னருக்கு அக்கறை இருக்குமானால் விவசாய கடன் தள்ளுபடி, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 100 சதவீத கல்வி நிதி, முதியோர் பென்சன், இலவச அரிசி ஆகிய திட்டங்களை கிடப்பில் போட முன்வருவாரா? முழுமையான முயற்சி எடுத்து துறைமுகத்தையும், விமான தளத்தையும் செயல்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×