search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    16-ந்தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க., காங், கம்யூ, விடுதலை சிறுத்தைகள் கூட்டாக போராட்டம்
    X

    16-ந்தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க., காங், கம்யூ, விடுதலை சிறுத்தைகள் கூட்டாக போராட்டம்

    விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்கின்றன.
    சென்னை:

    இயற்கை நீர்வளப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோத கொள்கைகளை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரியும், தமிழகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், முழுமையான வறட்சி நிவாரணம் வழங்க கோரியும், நதிகளை இணைக்க கோரியும் தமிழக அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் விவசாயிகள் சங்கத்தினர் இணைந்து வருகிற 16-ந்தேதி காலை 10 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

    இந்த போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்கின்றன.

    காஞ்சீபுரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்து பேசுகிறார்.

    தஞ்சாவூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பங்கேற்கிறார்.

    திருவாரூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மதுரையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், திருவள்ளூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திருவண்ணாமலையில் நடைபெறும் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பங்கேற்கிறார்கள்.

    கோவையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின் தலைவரும், தி.மு.க. விவசாயிகள் அணி செயலாளருமான கே.பி. ராமலிங்கம், சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, திருச்சியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொள்கிறார்கள்.

    இதே போல் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
    Next Story
    ×