search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிணறை தர மறுக்கும் ஓ.பி.எஸ். குடிநீருக்காக போராட்டம் நடத்துவது கேலிக்கூத்து: லட்சுமிபுரம் மக்கள் ஆவேசம்
    X

    கிணறை தர மறுக்கும் ஓ.பி.எஸ். குடிநீருக்காக போராட்டம் நடத்துவது கேலிக்கூத்து: லட்சுமிபுரம் மக்கள் ஆவேசம்

    கிணறை மக்களுக்கு தர மறுக்கும் ஓ.பி.எஸ். குடிநீருக்காக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருப்பது கேலிக்கூத்து என்று லட்சுமிபுரம் மக்கள் தெரிவித்துள்ளனர்.
    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள லட்சுமிபுரம் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் 2 கிணறுகள் இருந்த நிலையில் 3-வதாக ராட்சத கிணறு தோண்டப்பட்டது. இதனால் தங்கள் பகுதியில் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக லட்சுமிபுரம் மக்கள் கடந்த 2 மாதமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    கிணறையும் தோட்டத்தையும் மக்கள் யாராவது விரும்பினால் வாங்கிக் கொள்ளலாம் என்று ஓ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தோட்டத்தையும் கிணறையும் கிராம மக்களே வாங்க முடிவு செய்தனர். ஆனால் கிராம மக்களுக்கு தெரியாமல் அந்த இடத்தை சுப்புராஜ் என்பவருக்கு கடந்த மாதம் 12-ந் தேதி ஓ.பி.எஸ். விற்று விட்டதாக தகவல் வந்தது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் வேறு நபருக்கு விற்றதை கண்டித்து அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதனால் ராட்சத கிணறை கவர்னர் பெயரில் பதிவு செய்து ஊராட்சியிடம் வழங்கப்படும் என ஓ.பி.எஸ். தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. மேலும் 90 நாட்கள் கிணற்றில் இருந்து தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    ஆகஸ்ட் முதல் வாரத்தில் பத்திரப்பதிவு வேலைகள் தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அது குறித்த எந்த அறிகுறியும் ஏற்படவில்லை. இப்பிரச்சினை தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கோர்ட்டிலும் அதிகாரிகள் பத்திரப்பதிவு குறித்த உறுதிமொழியை தற்போது தெரிவிக்கவில்லை. இதனால் லட்சுமிபுரம் மக்கள் கடந்த 3 நாட்களாக மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


    குத்து விளக்கு ஏந்தி போராட்டம் நடத்திய பெண்களை படத்தில் காணலாம்

    நேற்று மாலை குத்துவிளக்கு ஏந்தி போராடிய அவர்கள் தெரிவிக்கையில் கிராம மக்கள் அனைவரும் பணம் திரட்டி கிணறு மற்றும் தோட்டத்தை வாங்க நினைத்திருந்தபோது அதனை ஓ.பி.எஸ். வேறு ஒருவருக்கு விற்று விட்டார்.

    எங்களுக்கு தானமாக வழங்க வேண்டாம். விலை கொடுத்தே வாங்க நினைத்திருந்த நிலையில் அவர் ஏமாற்றி விட்டார். எனவே கிணறு லட்சுமிபுரம் மக்களுக்கு கிடைக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். இன்று அதன் ஒரு பகுதியாக மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம். கிணறுக்காக கடந்த 2 மாதமாக நாங்கள் போராடி வருகிறோம். தன் சொந்த கிராமத்துக்கு கிணறை வழங்க மனமில்லாத ஓ.பி.எஸ். குடிநீர் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருப்பதுகேலிக் கூத்தானது என்றனர்.

    Next Story
    ×