search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் 3 மாதத்தில் 395 பேருக்கு டெங்கு பாதிப்பு: தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை
    X

    புதுவையில் 3 மாதத்தில் 395 பேருக்கு டெங்கு பாதிப்பு: தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை

    புதுவையில் கடந்த மே, ஜூன், ஜூலை மாதத்தில் மட்டும் 316 பேருக்கும், காரைக்காலில் 89 பேர் என 395 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    புதுவையில் பெரும்பாலும் ஆண்டின் இறுதி மாதங்களான நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கம். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக ஆண்டு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

    கடந்த மே, ஜூன், ஜூலை மாதத்தில் மட்டும் புதுவையில் 316 பேருக்கும், காரைக்காலில் 89 பேர் என 395 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் உயிர் இழப்பு ஏதும் இதுவரை இல்லை.

    இந்த நிலையில் தற்போது அரசு ஆஸ்பத்திரியில் 10 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளிலும் பலர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

    டெங்கு காய்ச்சல் புதுவையில் வேகமாக பரவுவதை தொடர்ந்து சுகாதார துறையின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமை தாங்கினார்.

    சுகாதார துறை செயலாளர் நரேந்திரகுமார், உள்ளாட்சி துறை செயலாளர் ஜவகர், சுகாதார துறை இயக்குனர் ராமன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் டெங்கு பரவாமல் தடுக்க சுகாதார துறை, உள்ளாட்சித்துறை மூலம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்களை அழிக்க உள்ளாட்சி துறை மூலம் தீவிர கொசு மருந்து தெளிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், அனைத்து பள்ளிகளிலும் சுகாதார துறை, உள்ளாட்சித்துறை மற்றும் பள்ளி நிர்வாகிகள் மூலம் துப்புரவு பணி மேற்கொள்வது.



    அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் நிலவேம்பு கஷாயம் கொடுப்பது, அரசு மருத்துவமனை, இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் டெங்கு சிறப்பு வார்டு அமைப்பது.

    டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பள்ளி மாணவர்களிடம் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள அறிவுறுத்துவது.

    மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.


    Next Story
    ×