search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவிகளிடம் சில்மி‌ஷம்: ஆசிரியரை பணி நீக்கம் செய்யக்கோரி பெற்றோர்கள் பள்ளியில் முற்றுகை
    X

    மாணவிகளிடம் சில்மி‌ஷம்: ஆசிரியரை பணி நீக்கம் செய்யக்கோரி பெற்றோர்கள் பள்ளியில் முற்றுகை

    சேலம் அருகே மாணவிகளிடம் சில்மி‌ஷம் செய்த ஆசிரியரை பணி நீக்கம் செய்யக்கோரி பெற்றோர்கள் பள்ளியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் அருகே உள்ள கச்சுப்பள்ளி பகுதியில் அரசு உயர் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.

    இப்பள்ளியில் எடப்பாடியை அடுத்த வெல்லாண்டி வலசு பகுதியை சேர்ந்த அர்த்தனாரி (வயது 45) என்பவர் அறிவியல் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.

    இவர் அப்பள்ளியில் பயிலும் மாணவிகளிடத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக கூறி இன்று காலை சுமார் 50-க்கும் மேற்பட்ட பெற்றோர் திடீரென திரண்டு வந்து பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    அப்போது சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் அர்த்தனாரியை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் எனக்கோரி கோ‌ஷம் போட்டனர்.

    இது குறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் தெரிவிக்கையில், அறிவியல் ஆசிரியர் அர்த்தனாரி அப்பள்ளியில் பயிலும் மாணவிகள் பள்ளியில் உள்ள கழிப்பறையை பயன்படுத்தும் போது கதவை திறந்தே வைத்திருக்க வேண்டும் எனவும், அவர் வகுப்பு எடுக்கும் போது மேல் சட்டையில் உள்ள காலர் பட்டனை கழற்றிவிட வேண்டும் என்றும் கூறுவதாக மாணவிகள் புகார் கூறி வருகின்றனர்.

    இது போன்ற பல்வேறு தகாத செயல்களில் ஈடுபட்டு வருவதால் ஆசிரியரை உடனடியாக அப்பள்ளியில் இருந்து பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மகுடஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முற்றுகையிட்ட பெற்றோரிடம் தொடர்ந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×