search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை, கோவில்பட்டி பகுதியில் இடி, மின்னலுடன் கன மழை
    X

    நெல்லை, கோவில்பட்டி பகுதியில் இடி, மின்னலுடன் கன மழை

    நெல்லை, கோவில்பட்டி, கழுகுமலை பகுதியில் நேற்று மாலை சுமார் 1 மணி நேரம் இடி-மின்னலுடன் மழை பெய்தது. சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்ததால் அப்பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வந்தது.
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்தது. குறிப்பாக அக்னி நட்சத்திர வெயிலை போன்று அடித்ததால் வெயிலை சமாளிக்க முடியாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இரவில் அதிக புழுக்கத்தால் தூங்க முடியாமல் தவித்தனர். சிலர் இளநீர், பதனீர், உள்ளிட்ட குளிர்பானங்களை அருந்தி வெயிலின் தாக்கத்தை சமாளித்து வந்தனர்.

    இதனால் கழுகுமலையில் இளநீர், நுங்கு, பதனீர் மற்றும் தர்பூசணி பழங்கள் ஆகியவற்றின் விற்பனையானது ஜோராக நடந்து வந்தது. தென்மேற்கு பருவ மழை பெய்யவேண்டிய இந்த காலகட்டத்தில் வாட்டி வதைத்த வெயிலால் மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளானார்கள். கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் மழை சரியாக பெய்யா விட்டால் கடும் வறட்சியை சந்திக்க நேரிடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை நெல்லை, கோவில்பட்டி, கழுகுமலை பகுதியில் வானில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் திடீர் என்று மழை கொட்ட தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அவ்வப்போது சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கழுகுமலை, கோவில்பட்டி பகுதிகளில் உள்ள தாழ்வான தெருக்களில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்ததால் அப்பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வந்தது. இந்த ஆண்டு விதைப்பிற்கு காத்திருக்கும் விவசாயிகள் தற்போது பெய்துள்ள மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழையால் கடும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நெல்லை, பாளையங்கோட்டை பகுதியிலும் இடி-மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல ஓடியது. இதேபோல கருப்பாநதி, அடவிநயினார் அணைப்பகுதியிலும் மழை பெய்தது. மாவட்டத்தின் மற்ற இடங்களில் மழை இல்லை. மலைப்பகுதியில் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை.

    பாபநாசம் அணை நீர்மட்டம் 51.60 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 16.40 அடியாகவும், மணி முத்தாறு அணை நீர்மட்டம் 33.43 அடியாகவும் உள்ளன. நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் அதிக பட்சமாக 45 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    Next Story
    ×