search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வசதி படைத்தவர்களுக்கு இலவச அரிசி நிறுத்தம்: அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு
    X

    வசதி படைத்தவர்களுக்கு இலவச அரிசி நிறுத்தம்: அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு

    கவர்னர் கிரண்பேடி உத்தரவு ஏற்கப்பட்டதால் வசதி படைத்தவர்களுக்கு இலவச அரிசி நிறுத்தப்படும் என்று அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் அனைத்து ரே‌ஷன் கார்டுகளுக்கும் தலா 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் நிதி நெருக்கடி காரணமாக சில மாதங்களாக அரிசி வழங்கப்படவில்லை.

    அரிசி வழங்குவதற்கு கவர்னர் ஒப்புதல் வழங்க வேண்டும். ஆனால் நிதி நெருக்கடி காரணமாக அவர் ஒப்புதல் வழங்க மறுத்துவிட்டார். இந்த நிலையில் ஏப்ரல் மாதத்துக்கான அரிசிக்கு மட்டும் பணத்தை ஒதுக்கீடு செய்து கவர்னர் உத்தரவிட்டார்.

    மேலும் அதில், வசதி படைத்தவர்களுக்கு இனி இலவச அரிசி வழங்க கூடாது, குரூப்-ஏ, குரூப்-பி அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், ஜி.எஸ்.டி. வரி பதிவு செய்தோர் போன்றோருக்கு இலவச அரிசி வழங்க கூடாது என்று கூறியிருந்தார்.

    இதனால் மஞ்சள் கார்டு அனைத்துக்கும் இலவச அரிசி கிடைக்காது என்று பேச்சு அடிபட்டது. இது சம்மந்தமாக குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் கந்தசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கவர்னரின் உத்தரவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அவர் கூறியபடி நிரந்தர அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ரே‌ஷன் அரிசி ரத்து செய்யப்படும். வருமான வரி செலுத்துவோர், ஜி.எஸ்.டி. வரி பதிவு செய்தோருக்கும் அரிசியை நிறுத்துவோம்.

    இது சம்மந்தமாக கணக்கெடுப்பு நடத்த வேண்டியது உள்ளது. அதற்கு சில மாதங்கள் ஆகும். எனவே அதன்பிறகு இந்த நடைமுறை அமலுக்கு வரும். தற்போது மே மாதத்துக்கான அரிசி வந்துவிட்டது. அதில் 50 சதவீதம் ரே‌ஷன் கடைகளில் வினியோகிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களிலும் விரைவில் வழங்கப்படும். இப்போது வழங்கப்படும் அரிசியை அனைத்து கார்டுதாரர்களும் பெற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அமைச்சர் கந்தசாமி கூறினார்.

    காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலின் போது ரே‌ஷன் கார்டுகளுக்கு 30 கிலோ இலவச அரிசி வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. இப்போது ஒரு தரப்பினருக்கு அரிசியை ரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

    இதை அந்த பிரிவு மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? அல்லது அவர்கள் பிரச்சினையை ஏற்படுத்துவார்களா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.

    Next Story
    ×