search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர்- விழுப்புரம் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த மழை: மின்னல் தாக்கி 2 பேர் பலி
    X

    கடலூர்- விழுப்புரம் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த மழை: மின்னல் தாக்கி 2 பேர் பலி

    கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

    இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று சூறை காற்றுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. அடுத்த சில நிமிடத்தில் பலத்த மழையாக கொட்டத் தொடங்கியது.

    இந்த மழை 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது. அப்போது இடி-மின்னல் அதிக அளவில் இருந்தது.

    பலத்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கி நின்றது.

    தற்போது விழுப்புரத்தில் ரெயில்வே மேம்பால சீரமைப்பு பணி காரணமாக போக்குவரத்து கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்க பாதை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை பெய்த பலத்த மழை காரணமாக சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நின்றதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேங்கிய தண்ணீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு அந்த பகுதியில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

    இதேபோல் காணை, கோளியனூர், மயிலம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், தியாகதுருகம், திருக்கோவிலூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    கடலூர் மாவட்டத்திலும் நேற்று மாலை சூறாவளி காற்று மற்றும் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. சூறை காற்று காரணமாக கடலூரில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. டிரான்ஸ்பார்மர்கள் மீது மரங்கள் விழுந்ததால் கடலூரில் 5 மணி நேரத்துக்கும் மேலாக மின் விநியோகம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

    மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள பள்ளி மைதானத்தில் மழையின் போது விளையாடி கொண்டிருந்த கல்லூரி மாணவன் விக்னேஷ் (வயது 19), 8-ம் வகுப்பு மாணவர்கள் அறிவுமணி (13), சோமசுந்தரம் (12), அகிலன் (13), பவித்ரன் ஆகிய 5 பேரும் இடி-மின்னல் தாக்கியதில் காயம் அடைந்து மயங்கி விழுந்தனர். அவர்களை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


    கடலூர் அருகே உள்ள எம்.புதூரைச் சேர்ந்த சிவா (28) என்ற வாலிபர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சாலையோரம் இருந்த மின் கம்பி அறுந்து தொங்கியதை கவனிக்காமல் சென்ற போது அவரது கழுத்தில் மின் கம்பி சிக்கி பலத்த காயம் அடைந்தார்.

    அவரை மீட்டு புதுவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிவா அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    விருத்தாசலத்தை அடுத்த ஆலடி அருகே கன்னியாங்குப்பத்தைச் சேர்ந்த விவசாயி பஞ்சமூர்த்தி (64). அதே பகுதியை சேர்ந்த பாவாடை என்பவரின் மனைவி செல்வி (45), முருகேசன் (62), காசிராஜன் (60), கங்கபவானி (58) ஆகியோர் அதே பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மாடு மேய்த்து கொண்டிருந்தனர்.

    அப்போது சூறை காற்றுடன் பலத்த மழை பெய்ததால் அனைவரும் அருகில் இருந்த மரத்தின் அடியில் ஒதுங்கினர். அந்த நேரத்தில் மின்னல் தாக்கியதில் பஞ்சமூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    முருகேசன், காசிராஜன், செல்வி, கங்கபவானி ஆகியோர் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தனர். அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பண்ருட்டி, செம்மேடு, விசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சூறை காற்றுடன் கூடிய பலத்த மழை கொட்டியது. இதில் செம்மேடு பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியமான பெருமாள் கோவிலின் கோபுரத்தின் மீது இடி தாக்கியதில் அதில் இருந்த 2 சிலைகள் சேதமடைந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

    மாவட்டத்தில் நெல்லிக்குப்பம், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், வடலூர், நெய்வேலி உள்பட பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.
    Next Story
    ×