search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பி.எஸ்.க்கு சொந்தமான கிணறு கவர்னர் பெயரில் பத்திர பதிவு
    X

    ஓ.பி.எஸ்.க்கு சொந்தமான கிணறு கவர்னர் பெயரில் பத்திர பதிவு

    பெரியகுளம் அருகில் உள்ள ஓ.பி.எஸ். கிணறு மற்றும் அதனை சுற்றியுள்ள நிலம் கிராம மக்களுக்கு வழங்கும் வகையில் கவர்னர் பெயரில் பத்திரபதிவு செய்யப்பட உள்ளது.
    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான நிலத்தில் ராட்சத கிணறு வெட்டப்பட்டது.

    இதனால் அப்பகுதியில் நீராதாரம் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் கிணற்றை பொதுமக்களுக்கு ஒப்படைக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தினர். இதனையடுத்து நிலம் மற்றும் கிணறு சுப்புராஜ் என்பவருக்கு விற்கப்பட்டது.

    கிராம மக்களுக்கு வழங்காமல் ஓ.பன்னீர் செல்வம் வேறு ஒருவருக்கு வழங்கியதை கண்டித்து பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். அவர்களிடம் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஏற்கனவே உறுதி அளித்தபடி ராட்சதகிணறு, போர்வெல் மற்றும் அதனை சுற்றியுள்ள 12 சென்ட் நிலத்தை ஊர்மக்கள் பயன் பாட்டிற்காக லட்சுமிபுரம் ஊராட்சிக்கு தானமாக தர ஓ.பி.எஸ். சம்மதித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்த கிணறு பிரச்சினை தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 2-ந் தேதி வருகிறது. விசாரணையின்போது மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    எனவே அதற்குள் தானமாக வழங்கப்பட்ட கிணறு மற்றும் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இடம் தமிழக கவர்னர் என்ற பெயரில் பதிவு செய்யப்படும். இதனால் குறைந்த பதிவு தொகையாக ரூ.100 முதல் ரூ.200 வரை மட்டுமே செலவாகும். பத்திரத்தில் லட்சுமிபுரம் மக்கள் குடிநீர் தேவை பயன்பாட்டிற்காக ஊராட்சிக்கு இந்த சொத்துக்கள் பாத்தியப்பட்டவை என்ற வாசகங்கள் இடம் பெறும். அதன்பிறகு அவை ஊராட்சி கட்டுப்பாட்டுக்கு வந்து விடும். அரசு பெயருக்கு சொத்து மாற்றப்படுவதால் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.

    தேனி மாவட்டத்தில் முதன்முறையாக கவர்னர் பெயரில் பத்திரம் பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் எந்த காலத்திலும் மக்கள் பயன்பாட்டிற்காகவே இவை பயன்படுத்தப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யும் வகையில் வரும் 31-ந் தேதி பத்திரப்பதிவு நடைபெற உள்ளது.

    Next Story
    ×